ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பொலிஸார் தகவல் வழங்காததால், மற்றொரு வழக்கில் சந்தேகநபருக்கு வழங்கிய பிணையில் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கைதி விடுவிக்கப்பட்டார். அதனால் சந்தேகநபர் நீதிமன்றிருந்து வெளியேறியதால் குழப்பம் ஏற்பட்டது.
எனினும் நீதிமன்றப் பிடியாணையுடன் சென்று சந்தேகநபரை சில மணிநேரங்களிலேயே பொலிஸார் கைது செய்தனர். அவரை 14 நாட்களுக்குத் தடுத்துவைத்து விசாரிக்க பொலிஸார் நீதிவானிடம் விண்ணப்பம் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், சந்தேகநபரை 7 நாட்களுக்கு மட்டும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவரை யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் 21 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதன் பெறுமதி 2 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் விற்பனை செய்யும் நோக்குடனேயே ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நேற்று திங்கட்கிழமை அழைத்து சென்றனர். எனினும் சந்தேகநபர் சார்பில் நகர்த்தல் பத்திரம் இணைக்கப்பட்டு மற்றொரு வழக்கு மன்றில் அழைக்கப்பட்டது. அந்த வழக்கு நிறைவடைந்ததும் சந்தேகநபர் நீதிமன்றிலிருந்து வெளியேறினார்.
சந்தேகநபருக்கு எதிராக புதிய வழக்கைக் கொண்டுவரும் தகவலை யாழ்ப்பாணம் பொலிஸார் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் தெரிவிக்கவில்லை. அதனால் நீதிமன்றிலிருந்த பொலிஸார் அசமந்தமாக இருந்த தருணத்தில் சந்தேகநபர் பதற்றமின்றி நீதிமன்றிலிருந்து வெளியேறிச் சென்றார்.
இதனால் 21 கிராம் ஹோரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கு மன்றில் எடுக்கப்பட்ட போது சந்தேகநபர் மன்றிலிருந்து வெளியேறிவிட்டார். அதனால் பொலிஸார் குழப்பமடைந்தனர். சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவை நீதிவான் வழங்கினார்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரைத் தேடி அவரது வீட்டுக்கு விரைந்தனர். அங்கு சந்தேகநபர் இருந்துள்ளார். அவரைக் கைதுசெய்த பொலிஸார், நேற்று மாலை யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர்.
“சந்தேகநபரும் அவரது மூத்த சகோதரனும் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அதற்காகவே சுமார் 2 இலட்சம் பெறுமதியான 21 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சந்தேகநபர் தென்பகுதியிலிருந்து வாங்கிவந்துள்ளார்.
எனவே சந்தேகநபரின் பின்னணியில் உள்ளவர்களைக் கைதுசெய்வதற்கு வசதியாக அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும்” என்று பொலிஸார் நீதிவானிடம் தடுத்துவைத்து விசாரிக்கும் விண்ணப்பத்தை முன்வைத்தனர்.
அதனை ஆராய்ந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேக நபரை 7 நாட்களுக்கு பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க அனுமதித்து வழக்கை ஒத்திவைத்தார்.