அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்

557 0

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பதவியை இழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர், ஜி.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி கடந்த 1998-ம் ஆண்டு ஜி.மங்கலம் சர்ஜாபுரம் சந்திப்பில் கோவிந்தரெட்டி என்பவர் தலைமையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகலூர், ஜி.மங்கலம் உள்பட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இந்தநிலையில் போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரை கல், கம்பு, இரும்பு கம்பிகளால் போராட்டக்காரர்கள் தாக்கினர். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் பலர் காயம் அடைந்தனர். போராட்டத்தின் போது போலீஸ் ஜீப் ஒன்றும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அரசு பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக பாகலூர் போலீசார் கோவிந்தரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் தற்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் பாலகிருஷ்ணரெட்டியும் கலந்து கொண்டதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர், 72-வது குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில் நடந்தது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையின் போது 27 பேர் இறந்து போனதால் மற்ற 81 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணரெட்டி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து வருவதால் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் காயத்ரி ஆஜராகி வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதாக நீதிபதி அறிவித்தார். இதற்காக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உள்பட 81 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். மதியம் 3 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

இந்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படுகிறது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147-ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341-ன் கீழ் ஒரு மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை பாலகிருஷ்ணரெட்டி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.


போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கோவிந்த ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.37 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள 4 பேருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள 65 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக் கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment