ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பாரிய நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. முறையான தலைமைத்துவம் ஒன்று காணப்படாமையின் காரணமாகவே இந் நிலை இன்று தோற்றம் பெற்றுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழைத்த துரோகமே இன்று பொது ஜன பெரமுன முன்னணி என்ற புதிய கட்சி தோற்றம் பெற வழியேற்படுத்தியது எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணியமைத்துக் கொள்வது மீண்டும் இரண்டாவது அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்தும்.
இரண்டு தரப்பினரும் புதிய கூட்டணி ஒன்று அமைக்கும் பொழுது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு.பொதுஜன பெரமுன முன்னணியினர் ஒருபோதும் தங்களின் தலைமைத்துவத்தினையும், கட்சியின் சின்னத்தினையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
இதனால் வீண் முரண்பாடுகளே இடம் பெறும். ஆகவே தேர்தல்கள் இடம் பெறும் வரையில் முழுமையாக இரண்டு தரப்பினரும் மக்களுக்கு சேவையாற்றினால் மக்களே தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் என்றார்.