அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
மெக்சிகோ நாட்டின் வழியாக மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பெருமளவில் அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் பொருளாதார, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
இப்படி சட்டவிரோதமாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய தடுப்புச் சுவரை கட்டுவேன் என்று டிரம்ப் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அவர் விடாப்பிடியாகவும் உள்ளார்.
இதற்காக 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) நிதி ஒதுக்கும்படி டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டது.
ஆனால், இதற்கு நிதியை ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி நிதி ஒதுக்குவதை எதிர்க்கிறது. இதனால் அமெரிக்கா-மெக்சிகோ தடுப்புச் சுவருக்கான நிதி மசோதா நிறைவேற்றப்படவில்லை.
மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்புக்கும், ஜனநாயக கட்சிக்கும் சமரசம் ஏற்படாததால் வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட 9 அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கி உள்ளன. இந்த நிலை 3-வது வாரமாக நீடிக்கிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும், ஜனநாயக கட்சி தலைவர்களில் ஒருவருமான நான்சி பெலோசி, செனட் சிறுபான்மை தலைவர் சுக் சூமெர் ஆகியோரை டிரம்ப் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது தடுப்புச் சுவர் கட்டுவதற்கான நிதியை ஒதுக்க நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது:-
தடுப்புச் சுவர் கட்டுவதற்கு நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவேண்டும். இல்லையென்றால் தேசிய அவசர நிலையை அறிவித்து அதைக் கட்டுவேன். இதனால் விரைவாக தடுப்புச் சுவரை கட்ட முடியும்.
நான் நினைத்தால் அவசர நிலையை அறிவித்து இதை நிச்சயமாக செய்ய முடிக்க இயலும். எனினும் முறைப்படி நிதியை பெற்று தடுப்புச் சுவரை கட்டவேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
அரசு பணி முடக்கம் எவ்வளவு நாள் நீடித்தாலும் எனது முடிவில் எந்த மாற்றமும் கிடையாது. நமது எல்லை சிறந்த பாதுகாப்பை கொண்டிருக்கவேண்டும். சுவருக்கான நிதியை ஒதுக்கும் வரையில் நான் எந்த மசோதாவிலும் கையெழுத்திடமாட்டேன் என்று அவர் ஆவேசமாக கூறினார்.
அமெரிக்காவில் இதுவரை போர்க் காலங்களில் மட்டுமே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.