பாராளுமன்ற தேர்தல் – எடப்பாடி பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

269 0

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்துப் பேசினார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமராக மோடி மே 26-ந்தேதி பதவி ஏற்றார். 

அவரது பதவி காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே இருப்பதால் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. 

காங்கிரஸ் மாநில கட்சிகளையும், எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே போல் பா.ஜனதாவும் தனது பழைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. 

ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகளான தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் ஆகியவை வெளியேறி விட்டது. சிவசேனா பிரதமர் மோடியையும் பா.ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலில் சிவசேனாவும் வெளியேறும் நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா தனது கூட்டணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மாநிலங்களை விட தமிழகத்தில் பா.ஜனதா மிக பலவீனமாக இருப்பதாக கட்சி மேலிடம் கவலை அடைந்துள்ளது. 

தனித்து போட்டியிடும் அளவுக்கு தொண்டர்கள் பலம் இல்லாததால் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பா.ஜனதா மிக குறைந்த ஓட்டுகளே பெற்றது. எனவே கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மறைந்த ஜெயலலிதா காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 38 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தார். 

நாடு முழுவதும் வீசிய மோடி அலை தமிழகத்தில் எடுபடவில்லை. இதனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வுக்கு மறைமுகமாக பல்வேறு வழிகளில் பா.ஜனதா நெருக்கடி கொடுத்து கூட்டணிக்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும் தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் தலைமையில் பலமான கூட்டணி அமைவதால் அதை பா.ஜனதாவால் தனித்து எதிர் கொள்ள முடியாது என்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. 

முன்னதாக முதல்- அமைச்சரும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப் பாளருமான எடப்பாடி பழனிசாமியை தமிழக பா. ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று திடீர் என்று சந்தித்து பேசினார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள். பின்னர் இந்த சந்திப்பு பற்றி தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது இது மரியாதை நிமித்த மான சந்திப்பு என்றும் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்துப்பேசிய ஒரு சில மணி நேரங்களில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். 

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவே இருவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியதாக கூறப்படுகிறது. 

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வந்துள்ளார். 

ஆனால் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பா.ஜனதா மேலிடத்தின் ஆலோசனையின் பேரிலேயே எடப்பாடி பழனிசாமியை தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்துப்பேசி இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த சந்திப்பின் மூலம் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி ஏற்படும் என்றும் அதற்கு முன்னோட்டமாக திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை பா.ஜனதா ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழகத்தில் பா.ஜனதா 12 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளை கேட்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. 

இதையடுத்து அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து பேசினர். ஆனால் தாங்கள் அரசியல் பேசவில்லை என்றும் இலாகா சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசியதாகவும் இரு அமைச்சர்களும் மறுத்தனர். 

தற்போது தமிழிசை சவுந்தரராஜனும், பொன் ராதாகிருஷ்ணனும், அரசியல் பற்றியோ, கூட்டணி பற்றியோ பேசவில்லை என்றும், பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பாகவும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் பேசியதாக தெரிவித்துள்ளனர். 

ஆனால் கூட்டணி தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சு நடத்தியதாகவும், மோடி வருகையின்போது கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது. 

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம்- புதுச்சேரி, அந்தமான் நிகோபர் மாநிலங்களுக்கான பா.ஜனதா பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயல், துணை பொறுப்பாளராக சி.டி.ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார்.

Leave a comment