தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது – மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ்

6511 0

‘பிராந்திய மொழிக்கு நிகராக தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசினார்.

தென்னிந்திய இந்தி பிரசார சபையின் 82-வது பட்டமளிப்பு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சபை வளாகத்தில் நேற்று நடந்தது. சபை தலைவரும், வேந்தருமான நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் பட்டங்களை வழங்கி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-

தென்னிந்திய இந்தி பிரசார சபை நூறு ஆண்டுகள் சேவை செய்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. மொழி என்பது கடவுள் மனிதனுக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும். மொழி மூலம் தான் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும். மொழியின் வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியால் கலாசார வளர்ச்சி, நாகரிகத்தின் வளர்ச்சிகள் அடங்கி உள்ளன.

வடஇந்தியாவில் பல பகுதிகளில் பேசுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் இந்தி மொழி உதவுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் சில பகுதிகளில் இந்தி மொழி பேசப்படுவதில்லை. 1918-ம் ஆண்டு தென்னிந்திய இந்தி பிரசார சபை ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 1964-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தென்னிந்திய இந்தி பிரசார சபை நாட்டு நலன் கருதி தேசிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

நாட்டுக்கு சேவையாற்றி வரும் சபை இந்தி மட்டும் அல்லாது பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதுடன், பிராந்திய மொழி நூல்களையும் வெளியிட்டு வருகிறது.

இதுவரை 32 ஆயிரத்து 199 பேர் விஷாரத் பட்டமும், 22 ஆயிரத்து 6 பேர் பிரவின் பட்டமும் பெற்றுள்ளனர். குறிப்பாக தற்போது 4 ஆயிரத்து 112 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தூர கல்வி பயின்ற 2 ஆயிரத்து 337 பேருக்கும், ரெகுலர் படிப்பு மூலம் பயின்ற 1,799 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 26 பேர் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் பேசி உள்ளார். நானும் ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்தியில் தான் பேசுகிறேன். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களிடமும் இந்தியில் தான் பேசுகிறோம். இதன் மூலம் உலகளவில் இந்தி மொழிக்கு நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி பல வெளிநாட்டினர் தாங்களும் இந்தி படிப்பதற்காக தங்கள் நாடுகளில் இந்தி அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்காது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி ஊடகங்கள் மற்றும் விளம்பரத்துறைகளில் இந்தி படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. டுவிட்டர், பேஸ் புக் ஆகியவற்றிலும் இந்தி மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தென்னிந்தியாவிலும் பிராந்திய மொழிக்கு நிகராக இந்தி மொழியும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்டம் பெற்றவர்கள் இந்தி மொழியை பரப்புவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விழாவில் ‘சுப பிரபாத்’ (‘குட்மார்னிங்-365’) என்ற நூலை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டார். தொடர்ந்து பிராந்திய மொழி இலக்கியவாதிகள் மாலன் நாராயண் (தமிழ்), வேம்பள்ளி ரெட்டி நாகராஜலு (தெலுங்கு), சின்னப்பா அங்காடி (கன்னடம்), மாலூர் ஸ்ரீதரன் (மலையாளம்) ஆகியோருக்கு விருதும், சான்றிதழும் மந்திரி சுஷ்மா சுவராஜ் வழங்கினார்.

தொடர்ந்து மூத்த இந்தி ஆசிரியர்கள் பி.வத்சலா, ஆர்.பாலமீனாட்சி, ஜி.விஜயலட்சுமி, எம்.எல்.கீதா, மகேஷ்வரி ரெங்கநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

முன்னதாக துணைவேந்தர் அனுமந்தப்பா வரவேற்றார். பொதுசெயலாளர் எஸ்.ஜெயராஜ், பொருளாளர் சி.என்.வி. அண்ணாமலை, பதிவாளர் பிரதீப் கே.சர்மா, கல்விக்குழு தலைவர் எஸ்.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனி அதிகாரி கே.தீனபந்து நன்றி கூறினார்.

Leave a comment