சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் இடமளிக்காது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அப்படியான அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, அவர் வெளியிட்ட இனவாத கருத்துக்கள் குறித்து குழப்பமடைய தேவையில்லை.
விக்னேஸ்வரனின் கருத்துக்களை முழுமையாக கண்டிக்கின்றோம். இப்படியான பேச்சுக்கள் தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு தூண்டு கோலாக அமையும்.உலகம் பெயர் தமிழர்கள் தற்போது இரண்டாக பிளவுப்பட்டுள்ளனர். இனங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒரு தரப்பு இருந்து வருகிறது.
மற்றைய தரப்பினர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர்.இதன் காரணமாகவே விக்னேஸ்வரன் இப்படியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இப்படியான சம்பவங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.முதலமைச்சர்கள் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவார்களேயானால், அது மிகப் பெரிய பிரச்சினை எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.