பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ரணில் நேரடியாக தலையிட வேண்டும்!

237 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபாய் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தும், எதிர்வரும் தினங்களில் 700 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு தொழிற்சங்கங்கள் கையெழுத்திட முயற்சித்துள்ளமையினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் நேரடியாக தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்  எனத் தெரிவித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். 

மகஜர் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், 

நாட்டில் அரசாங்கங்கள் மாற்றமடைந்து வந்தாலும் அன்று தொடக்கம் இன்று வரை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

அத்தோடு எதிர்கட்சி தலைவரும் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி கம்பனிகளுடன் பேச்சு வார்ததை நடத்தி இந்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத் தருவதாக கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார். 

எவ்வாறிருப்பினும் தற்போது ஆளுங்கட்சி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதன அதிகரிப்ப பெற்றுக் கொடுக்கக் கூடிய அதிகாரத்தை கொண்டிருக்கின்றது. எனவே கம்கனிகார்களுடைய நிபந்தனைகளுக்கு கீழ்படியாமலும், தொழிற்சங்கங்களின் பொய் பிரசாரங்களுக்கு செவி சாய்க்காமலும் தொழிலாளர்களின் நன்மையை மாத்திரம் பிரதமர் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என அந்த மகஜரில் குறிப்பிட்டுள்ளோம். 

இந்த விடயம் தொடர்பில் இன்றே தொழிற் அமைச்சருக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்கின்றோம். 

அத்தோடு கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட முன்னர் அதன் உள்ளடக்கத்தினை பொது மக்களுக்கு அவர்களுக்கு புரிந்துகொள்ளக் கூடிய மொழியில் வெளிப்படுத்தி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அந்த மகஜரில் தெரிவித்துள்ளோம். 

அது தொடர்பாக தொழிலாளர்களின் நிலைப்பாட்டினை கேட்டறிந்த பின்னரே கையெழுத்திடப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம் என்றார். 


Leave a comment