புயல் நிவாரண பணிகள் தொடர தேர்தல் கமிஷன் அனுமதித்து இருப்பதால், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
கருணாநிதி மரணம் அடைந்ததால், காலியாக இருக்கும் திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தமட்டில், வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதாடுகையில் கூறியதாவது:-
திருவாரூர் தொகுதிக்காக இடைத்தேர்தல் அறிவிப்பு அவசரகதியில் வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கஜா புயலினால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டுவிடும். பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்படும். இதுமட்டுமல்ல, பொங்கல் பண்டிகை வேறு வருகிறது. பொங்கல் பண்டிகையை 4 நாட்கள் மக்கள் கொண்டாடுவார்கள். இந்தநிலையில், இடைத்தேர்தல் நடத்தினால், அது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இப்போது திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தினால், நேர்மையாக நடைபெறாது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது” என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு மனுதாரரின் வக்கீல் பதில் அளிக்கையில், “கஜா புயலினால் பலர் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் பலவற்றை இழந்து உள்ளனர். இந்த நிலையில், தேர்தல் நடத்தினால் முறைகேடு நடைபெறும். அதுமட்டுமல்ல, புயலினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்கள், தற்போது இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை. திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ந் தேதி மரணம் அடைந்தார். அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தவில்லை. ஆனால், ஆகஸ்டு 7-ந் தேதி கருணாநிதி இறந்தார். அவரது தொகுதியான திருவாரூருக்கு மட்டும் முதலில் தேர்தலை நடத்துவது உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோதமானது” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் வாதாடினார். அவர் வாதாடுகையில், “ஒரு எம்.எல்.ஏ. இறந்து விட்டால், அவர் இறந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். கருணாநிதி இறப்பை தொடர்ந்து, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 7-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை, ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது, வருகிற பிப்ரவரி முதல் வாரத்துக்குள் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவாதம் அளித்து உள்ளது. இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டின் மதுரை கிளை இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் முடித்து வைத்தது” என்று கூறினார்.
அப்போது நீதிபதிகள், “கஜா புயலின் பாதிப்பில் இருந்து மக்கள் மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்குள் வந்து விட்டால், இந்த பணிகளை மேற்கொள்ள தடை ஏற்படாதா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு தேர்தல் கமிஷனின் வக்கீல் பதில் அளிக்கையில், “தேர்தல் கமிஷனிடம், தமிழக தலைமைச் செயலாளர் முறையான அனுமதியை பெற்று, இந்த நிவாரண பணிகளையும், மீட்புப் பணிகளையும் மேற்கொள்ளலாம். அதற்கு தடை எதுவும் ஏற்படாது” என்றார்.
தடை விதிக்க மறுப்ப இதைத்தொடர்ந்து நீதிபதிகள், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மனுதாரரை பொறுத்தவரை தேர்தல் அறிவிப்பினால், கஜா புயல் நிவாரண பணி தடைபடும் என்று கூறுகிறார். எனவே, இந்த வழக்கில், தமிழக தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறோம். அதேநேரம், திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்து அறிவிக்கை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.
தேர்தல் அறிவிக்கைக்கு தடை கேட்டு தாக்கல் செய்த மனுதாரரின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறோம். பிரதான வழக்கை வருகிற பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் இந்திய தேர்தல் கமிஷனும், தமிழக தலைமைச் செயலாளரும் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால், தற்போது அங்கு நடந்து வரும் புயல் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என்றும், எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அவரது சார்பில் மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பு ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். ஆனால் அதை தலைமை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் ஆகிய 2 இடங்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
முதல் நாளான நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாசிடம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமலை புதூர் பகுதியைச் சேர்ந்த அக்னி ஆத்மா கட்சியின் தேசிய தலைவர் அக்னி ஸ்ரீராமச்சந்திரன், சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் ஆகிய 2 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்வது வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.