எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது – டிரம்ப்

259 0

பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். 


உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது.

ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை நிறுத்தினார்.

கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட டிரம்ப், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதி நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல், மந்திரி சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவை கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஆனால் அந்நாடு எதிரிகளுக்கு அடைக்கலம் தருகிறது. எதிரிகளை பாதுகாக்கிறது. இதனால் அந்த நாட்டுடன் நல்லுறவை கடைப்பிடிக்க முடியவில்லை.

பாகிஸ்தானின் புதிய அரசுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். காலம் தாழ்த்தாமல் அதனை உடனே செய்ய வேண்டும்.

அதே சமயம் பாகிஸ்தானுக்கு நிதி உதவியாக வழங்கிய வந்த 1.3 பில்லியன் டாலரை நான் நிறுத்திவிட்டேன்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னிடம் இருந்து தனக்கு ஒரு சிறப்பான கடிதம் கிடைத்ததாகவும், கிம் ஜாங் அன்னை விரைவில் சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.

Leave a comment