இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட உள்ள நூலகத்தை யார் வந்து பயன்படுத்தப் போகிறார்கள் என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை இந்தியா செய்து வருகிறது. அங்கு வாழ்வோரின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்திற்காக அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவது, ஆப்கன் அரசுடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்றை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானை புதுப்பிக்க மத்திய அரசு இதுவரை சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பிரமாண்ட நூலகம் அமைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் அமைக்கவுள்ள நூலகத்தால் என்ன பயன் என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் என்ன பலன் ஏற்படும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? அப்படியே கட்டினாலும் ஆப்கானிஸ்தானில் யார் வந்து அதனை பயன்படுத்தப் போகிறார்கள்? என குறிப்பிட்டுள்ளார்.