மைத்திரிபால சிறிசேன இன்று (03) முற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கட்சியின் மகளிர் அமைப்பு, இளைஞர் அமைப்பு, சட்டத்தரணிகள் அமைப்பு, பட்டதாரிகள் அமைப்பு, தொழிற்சங்கத்தினர் அமைப்பு உள்ளிட்ட அனைத்து இணைந்த சங்கங்களின் பிரதிநிதிகளையும் இதன்போது ஜனாதிபதி சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அவ்வமைப்புகளின் அலுவலகங்களை பார்வையிட்ட ஜனாதிபதி, அவற்றின் நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து இணைந்த சங்கங்களையும் மறுசீரமைத்து அவற்றின் வினைத்திறனான பங்களிப்பை கட்சிக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, பலமான மக்கள் நேய கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையக நடவடிக்கைகளை முறையாக பேணுமாறு ஜனாதிபதி கட்சியின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்களுக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, லசந்த அழகியவண்ண, இசுற தேவப்பிரிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோர் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்க அமைப்பின் சிரேஷ்ட செயற்பாட்டாளர் ஒருவரின் பிறந்த தின நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.