இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அங்கு வசிக்கும் அனைத்து இன மக்களையும் சந்திக்கவுள்ளேன் என இலங்கையில் பிறந்த நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் பிரதி மேயரான கம்சாயினி குணரத்னம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அங்குள்ள பெண்கள், இளைஞர் யுவதிகளுக்கு முக்கியத்துவமளித்து சந்திப்புக்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளேன். நாமனைவரும் சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக நம்பிக்கை, உண்மையைக் கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இலங்கைக்கான விஜயம் குறித்து கம்சாயினி குணரத்னம் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரமாக சிந்திப்பதிலும் மக்களுக்கு இருக்கும் அதிகாரத்திலும் நான் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். அத்தோடு ஜனநாயகத்தின் மீது நம்மனைவருக்கும் இருக்க வேண்டிய நம்பிக்கையின் முக்கியத்துவம் தொடர்பிலும் நான் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.
ஜனநாயகம் என்பது வெறும் சொல் என்பதற்கும் அப்பாற்பட்டது என்பதுடன் ஜனநாயகம் என்பது எப்போதும் முடிவுறாதவாறு தொடர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயன்முறையாகும். ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் என்ற வகையில் ஒஸ்லோவை பசுமையாக்குவதிலும் செழிப்பாக்குவதிலும் புத்தாக்கம் நிறைந்ததாக மாற்றியமைப்பதிலும் அனைவருக்கும் தங்குவதற்கான இடமொன்றை உருவாக்குவதிலுமே எனது பணியின் மிகுதியான காலத்தை செலவழித்திருக்கின்றேன்.
சிறந்த நாடொன்றில் வாழ்வதற்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு இவை இன்றியமையாதனவாகும். அன்றாடம் நாமாக முன்வந்து நம்மையும் நாம் வாழும் சமூகத்தையும் அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும். எமக்காவும் எமது எதிர்கால சந்ததியின் நன்மைக்காகவும் நாம் அதனைச் செய்ய வேண்டும்.
நான் பதினொரு வருட காலமாக அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன். உலகம் முழுவதும் சென்று வருவதற்கும், எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் அதன்மூலம் வாய்ப்பு அமைந்ததுடன் என்னுடைய சொந்த நாடான நோர்வேயிலேயே தூதுவராக இருந்து, சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது.
இம்முறை நான் பிறந்த நாடான இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளேன். என்னுடைய அனுவங்களை சமூகத்தின் கடைநிலை மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதன் ஊடாக அவர்களை சிறந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுதலை வழங்க விரும்புகின்றேன்.
உன்னுடைய நாடு உனக்கு என்ன செய்ய முடியும் எனக் கேட்காதே, உனது நாட்டிற்காக உன்னால் என்ன செய்ய முடியும் எனக் கேட்டுப்பார் என்ற மறைந்த ஜனாதிபதி ஜோன்.எப்.கென்னடியின் வார்த்தைகளில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன்.
இம்மாதம் 3 – 12 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வுள்ளேன். அங்கு கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளேன்.
அப்பிரதேசங்களில் வசிக்கும் அனைத்து இன மக்களையும் சந்திக்கவுள்ளேன். குறிப்பாக பெண்கள், இளைஞர் யுவதிகளுக்கு முக்கியத்துவமளித்து சந்திப்புக்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளேன். நாமனைவரும் சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக நம்பிக்கை, உண்மையைக் கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.