மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டும் பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம் மதுரை-சென்னை இடையே அதிநவீன தேஜஸ் ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரூ.1,258 கோடியில், அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக அமையும் இந்த ஆஸ்பத்திரியின் அடிக்கல் நாட்டு விழா எப்போது? என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி, மதுரை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் அவர், எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேஜஸ் சொகுசு ரெயில் தென் மாவட்ட பயணிகளிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிநவீன, முற்றிலும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் சொகுசு ரெயில் மதுரை- சென்னை இடையே இயக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 27-ந் தேதி நடைபெறும் விழாவில் தேஜஸ் ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அந்த ரெயில் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
தேஜஸ் ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை வந்து சேரும்.
இந்த ரெயில் வியாழக்கிழமையை தவிர பிற நாட்களில் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.