அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதா நிறைவேறியது. ஆனால் செனட் சபையில் அந்த மசோதா நிறைவேறுவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும், இதற்கான அனுமதியை நாடாளுமன்றம் தர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் உடும்புப்பிடி பிடிக்கிறார்.
ஆனால் மக்கள் வரிப்பணத்தில் ஒரு டாலர் கூட செலவழிக்கக் கூடாது, இந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக நிற்கிறது.
இதனால் அங்கு கடந்த 21-ந் தேதி நள்ளிரவில் இருந்து வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளின் அலுவலகங்கள் மூடப்பட்டு செயலிழந்து போய் உள்ளன. இதற்கு இன்னும் முடிவு காணப்படவில்லை. புத்தாண்டிலும்கூட ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே இதில் உடன்பாடு ஏற்படுவதற்கான அறிகுறி தென்பட வில்லை என்று அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று முன்தினம் ஜனாதிபதி டிரம்ப், தனது தரப்பு சமரச பேச்சாளர்களான துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழு தலைவர் மைக் முல்வானே, ஆலோசகர் ஜாரட் குஷ்னர் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக டிரம்ப் நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லை பாதுகாப்பு பிரச்சினையில் ஒரு உடன்பாட்டை செய்து கொள்வதற்காக நான் ஜனநாயக கட்சியினருக்காக வெள்ளை மாளிகையில் காத்திருக்கிறேன்” என கூறி உள்ளார்.
வரும் வியாழக்கிழமை, நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை கட்சியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.