கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு சுாதார அமைச்சர் விஜயம்

245 0

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சு உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குநேற்று (29) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். 

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுடன் அளவளாவி சுகாதார சேவைகள் குறித்து மக்களது கருத்துகளைக் கேட்டறிந்த அமைச்சர் குழுவினர் பின்னர், மக்களுக்காக 5 பார ஊர்திகளில் எடுத்து வந்திருந்த நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளித்தனர். 

சுகாதார அமைச்சரின் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கத்துடன் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் சிவமோகன், திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா, மாகாண மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரும் இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இணைந்திருந்தனர். 

இச்சுற்றுப் பயணத்தின் இறுதியில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. 

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் செயலாளர், கிளிநொச்சி அரச அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அனர்த்த கால சுகாதார சேவைப் பணிகளது மீளாய்வு மற்றும் எதிர்கால இடர் தவிர்ப்பு மற்றும் இடர் முன்னாயத்தம் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

சுகாதாரத் திணைக்கள வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மேற்படி விடயம் தவிர்த்து சுகாதாரத் துறையின் ஆளணிகளை அதிகரிப்பது, புதிய கட்டடங்களை நிர்மாணிப்பது ஆகிய பொதுவான அபிவிருத்தி தொடர்பான விடயங்களே பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது. 

முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் கட்டம் இரண்டினை அவசர மற்றும் விபத்துச் சிகிச்சைப் பிரிவு உட்பட முழுமையாக நிர்மாணிப்பதற்காக 2017 ஆம் வருடம் வைகாசி மாதம் பாதீட்டின் ஊடாக வழங்குவதற்குப் பரிந்துரை செய்யப்பட்ட 2500 மில்லியனை கட்டம் கட்டமாக ஒதுக்கீடு செய்யுமாறும், தாம் சுகாதார அமைச்சராக இருந்த காலப் பகுதியில் வடமாகாணத்தின் பல வைத்தியசாலைகளை மேம்படுத்த நெதர்லாந்து அரசின் ஊடாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த செய்திட்டமானது தாமதம் இன்றி அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியபோது சுகாதார அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டு உரிய அதிகாரிகளுக்கு அவற்றினைச் செயற்படுத்துமாறு உடனடியாக உத்தரவிட்டதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நெதர்லாந்து அரசின் திட்டத்தின் ஊடாகவே கிளிநொச்சியில் மகப்பேற்றியல் விசேட அலகு ஒன்று நிர்மாணிக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக வடமாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தினர் அமைச்சரைச் சந்தித்து தமக்கு இலங்கையில் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் வடமாகாணத்தில் மட்டும் திணைக்களத்திற்கு வெளியான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக முறையிட்டனர். 

முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் சுகாதார சாரதிகள் பல காலம் சேவை அனுபவம் மற்றும் விசேட பயிற்சிகள் ஆகியவற்றுடன் சிறந்த சேவையாற்றி வருவதால் வினைத்திறனான சேவையினைப் பெறும் நோக்குடன் திணைக்களத்தின் உள்ளான இடமாற்றம் வழங்கப்படுவதே பொருத்தமானது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். 

இந் நிலையில் தாமும் அதே கருத்தையே கொண்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் இலங்கையில் பிற மாகாணங்களிலும் மத்திய சுகாதார அமைச்சிலும் இடம்பெறுவது போல திணைக்களத்தின் உள்ளக இடமாற்றத்தினை வட மாகாணத்திலும் நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் எனக் கூறப்பட்டது. 

அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 50 ஆயிரம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 1500 டி.சி.எல். (TCL) கிலோ கிராமும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. Doxycline 100 mg tab 12,000, Maternity kit 25, Sanitary pads மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்குத் தேவையான திரிபோஷாவும் வழங்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, யுனிசெப் நிறுவனத்தால் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட சுகாதார உபகரணங்கள் ஒரு தொகையும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

Leave a comment