சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற்றுலா பயணிகள் மீட்பு

304 0

சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற்றுலா பயணிகளை ராணுவம் அதிரடியாக மீட்டது.

சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு சிக்கிம் மாவட்டம் சீன எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள நாதுலா கணவாய், சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாய் பகுதியை பார்வையிடுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளன. எனவே அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.இந்தநிலையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 4100 சுற்றுலா பயணிகள் 569 வாகனங்களில் நாதுலா கணவாய்க்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் ஜவஹர்லால் நேரு சாலை வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த சாலையில் பல அடி உயரத்துக்கு பனித்துகள்கள் நிரம்பி இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனங்கள் மேற்படி செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவற்றில் இருந்த சுற்றுலா பயணிகள் கடும் குளிராலும், போதிய உணவு இல்லாமலும் கடும் அவதிப்பட்டனர்.இது குறித்து ராணுவத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அதிரடியாக களத்தில் குதித்த வீரர்கள், அந்த சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் இறங்கினர். நவீன எந்திரங்கள் மூலம் சாலையில் இருந்த பனித்துகள்களை அகற்றிய அவர்கள், பின்னர் சுற்றுலா பயணிகளை 17–வது மைல் மற்றும் 13–வது மைல் பகுதிகளில் இருக்கும் முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள், போர்வைகள் போன்றவற்றை வழங்கிய வீரர்கள், அவர்களை தலைநகர் காங்டாக்குக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மீட்ட ராணுவ வீரர்களுக்கு அரசு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, காலநிலை சீராகும் வரை ஜவஹர்லால் நேரு சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகளில் 99 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மீட்கப்பட்டவர்களில் சிலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு ராணுவ டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மீட்புப்பணியில் பொதுமக்களும், மாநில அரசு அதிகாரிகளும் ஈடுபட்டதாக சிக்கிம் அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Leave a comment