புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்!

328 0

விவசாயிகள் மத்தியிலுள்ள தப்பபிப்பிராயங்களை களைந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். சகல வேலைகளும் முடிவுறும் தருவாயில், அதிக செலவிலான இத்திட்டத்தை கைவிடமுடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுக்கும், நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (29) கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, நீர்ப்பாசன அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒருமித்து செயற்படுவது குறித்து நாங்கள் இணக்கப்பாடுகளை கண்டிருக்கிறோம். விவசாயிகளுக்கும், குடிநீர் பாவனையாளர்களும் இடையிலுள்ள பிரச்சினை வட மாகாணத்தில்தான் உச்சத்தில் இருக்கிறது. இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டுசெல்வது இப்போது பிரதேசவாத பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. 

இப்பிரச்சினைக்கான மாற்றுத்திட்டங்களை நாங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இரணைமடு குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 20 மில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு தயாரகவுள்ளோம். இந்நிலையில், வெள்ளப்பெருக்கின் பின்னாலும் யாழ். மக்களுக்கு பதில் சொல்வது எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. புரிந்துணர்வு அடிப்படையில்தான் இதற்கு தீர்வுகாணப்பட வேண்டும். 

நீர்க்கட்டணங்களை அதிகரிக்க முடியாமையால், வறட்சி காலங்களில் மாத்திரம் குடிநீரை வழங்குவதற்கு இத்திட்டத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். 250 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின், விநியோக வேலைகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளன. ஆனால், இரணைமடு குளத்திலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் பிரச்சினையால் இத்திட்டம் இடைநடுவில் நின்றுகொண்டிருக்கிறது. 

அரசியல்வாதிகள் சிலர் இரணைமடு விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில், விவசாய மக்கள் மத்தியில் இத்திட்டம் பற்றிய தப்பபிப்பிராயங்களை களையவேண்டும். தண்ணீரை பகிர்ந்துகொள்வதால் விவசாயத்துக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படாது என்பதை அவர்கள் உணரவேண்டும். பாரிய செலவில் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தை இடைநடுவில் கைவிட முடியாது. 

இந்த இழுபறியினால் நிதி வழங்கும் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை முடக்கிவிடும் அபாயம் உள்ளது. இருக்கின்ற குறுகிய காலத்துக்குள்ளாவது இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு யாழ். மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற குழாய்மூலம் நீர் விநியோகம் 3.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் என்றார். 

இச்சந்திப்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின், வடபிராந்திய பிரதி பொது முகாமையாளர் ரி. பாரதிதாசன், உதவி பொது முகாமையாளர் கே. வாசுதேவன், மாவட்ட பொறியியலாளர் என். நவரூபன் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரதி பொதுச் செயலாளர் எஸ். சண்முகநாதன், பிரதி முகாமையாளர் என். சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதன்பின்னர் அமைச்சர் இரணைமடு குளத்தையும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அனர்த்த நிவாரண செயலணி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் உள்ளிட்ட நீர் மூலங்களை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Leave a comment