யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை இரவு நேரங்களில் பொது இடங்களில் வீசுபவர்களை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற நடவடிக்கைகள் கடந்த வாரத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் மாநாகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீடு, வர்த்தக நிலையங்கள் , உணவகங்கள் , கோழி இறைச்சிக் கடைகளின் கழிவுகளை ஏற்றி சென்று இரவு நேரம் மக்கள் நடமாட்டப்பகுதிகளில் வீசுபவர்களினால் பெரும் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக சுட்டிக்காட்டுகின்றபோதும் குறித்த இழி செயலை படித்தவர்கள் முதல் பாமரர் வரையில் மேற்கொள்வது தொடர்ச்சியாக சுட்டிக்காட்டபட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நோக்கில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்பட்டனர் இவ்வாறு மேற்கொண்ட நடவடிக்கைநில் ஒரே நாளில் 22 பேர் வாகனங்களுடன் சிக்கினர். இதனால் குப்பைகளை ஏற்றி சென்று வீதியில் கொட்டியவர்களை பிரதேச செயலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கே விசேட நடவடிக்கைநில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த குற்றமிழைத்தவர்களிற்கு எதிராக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு பதிவுகள் மேற்கொண்ட அனைவருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு எதிர் வரும் 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது. இந்த நடவடிக்கைக்காக யாழ். பிரதேச செயலாளர் உட்பட பணியாளர்கள் சுமார் 20 பேர் வரை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.