அரியானா மாநிலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
வடமாநிலங்களில் தற்போது கடும் குளிருடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. கண்ணை மறைக்கும் பனிமூட்டம் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் வெகுநேரம் ஆகியும் பனிமூட்டம் விலகாததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே மெதுவாக செல்ல வேண்டி உள்ளது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் பனி மூட்டத்தால் விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலம் சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் பனி மூட்டத்திற்கு மத்தியில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து இரண்டு சொகுசு கார்கள் மீது மோதியது. அம்பாலா அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் சண்டிகரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் திங்கட்கிழமை ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.