தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யனை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த கீதா லட்சுமி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வந்தது.
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மயில் வாகனன் நடராஜன் உள்பட 48 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மயில்வாகனன் நடராஜன் பல்கலைக்கழகத்தின் சட்டப்படி மீண்டும் துணை வேந்தர் பதவியைப் பெற சட்ட உதவியை நாடி உள்ளார்.
இதனால் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் டாக்டர் சுதா சேஷய்யன் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் சுதா சேஷய்யன் துணை வேந்தராக தேர்வான தகவலை கவர்னர் பன்வாரிலால் இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டாக்டர் சுதா சேஷய்யன் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இதுவரை பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
30 வயதில் டாக்டராக சேவையை தொடங்கிய சுதா சேஷய்யன் இன்று மருத்துவ துறையின் உயர் பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த எழுத்தாளரான அவர் மருத்துவம், ஆன்மிகம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார்.
சிறந்த பேச்சாளரான அவர் லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட ஆன்மீக இசையிலும் சிறந்து விளங்குபவர். முக்கிய பிரமுகர்களின் பொதுநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தனித்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.