உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திருநாவுக்கரசர் கூறினார்.தி.மு.க. நேற்று திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி உறுப்பினர் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் 3 வார்டுகள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி வார்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 7 வார்டுகளும், சேலம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சியின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரிடம் நிருபர், தி.மு.க. நேற்று திருச்சி, தூத்துக்குடி, சேலம் மாநகராட்சிக்கான வார்டு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் 3-ம், தூத்துக்குடியில் 7-ம் சேலத்தில் 5-ம் என குறைவாக ஒதுக்கப்பட்டு இருக்கிறதே, இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களுடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட குழுவினருடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள இடங்களை பகிர்ந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரும் பேசி, அறிவிக்கப்பட்ட இடங்களில், முடிவாகி போன சில வார்டுகள் இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கலாம். ஏனெனில் பேச்சுவார்த்தைகள் அந்தந்த மாவட்ட அமைப்புகளில் நடக்கிறது.
அறிவிக்கப்பட்ட அந்த மாநகராட்சிகளில் மேலும் தொடர்ந்து பேசி, மீதமுள்ள வார்டுகளுக்கும் பேசி, பகிர்ந்து கொண்ட பிறகு அறிவிக்கலாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு எண்ணிக்கை அறிவிக்கப்படுகின்ற போது ஒவ்வொன்றுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.