அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெள்ளம் பெரிதும் பாதித்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸைச் சந்தித்து பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு மாணவர்களுக்கான ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்களையும் கையளித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 32 பாடசாலைகளில் இடரால் பாதிக்கப்பட்ட 1585 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் 8415 மாணவர்கள் அடங்குகின்றனர். பாடசாலைகள் தொடங்கவுள்ள நிலையில் பாடசாலைச் சீருடை உள்ளிட்ட அனைத்தும் அவர்களிடம் இல்லாதிருப்பது வேதனையான விடயம் என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்தோடு சில வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலணிகள் வழங்க முடியாத சூழ்நிலை இருப்பதால் அவர்களுக்கும் சீருடையுடன் சேர்த்து காலணிகளும் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலயக் கல்விப் பணிப்பாளர் வேண்டுகோளாக கல்வி அமைச்சிடம் முன்வைத்துள்ளார்.
இதைவிட குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் அன்றாட வாழ்க்கை வாழும் குடம்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் ஜீவனோபாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதனைச் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இவை அனைத்தும் சீர்செய்யப்படவில்லையெனில் பாடசாலைகளை நடாத்துதல், மாணவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நெருக்கடிகள் உள்ளது என்பதனை அரசின் உயர்பீடங்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எடுத்துகாட்டும் என தெரிவிக்கப்பட்டதோடு,
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்பது பாடசாலைகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு முல்லைத்தீவு கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாதிப்டைந்துள்ளதாக முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது மாணவர்களின் நலனில் பெரிதும் அக்கறைகொண்டு அனைவரும் செயற்படவேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.