நாட்டில் மதக் கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களாகவே புத்தர் சிலைகள் சேதம் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பார்க்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்த பட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் சமூகத் தலைவர்களதும் கருத்தாகவுள்ளதாகவும் புத்தசாச அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் தலைமையில் கூடி ஆராயப்பட்டது. அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரிஷாட் பத்தியுத்தீன், ரவுப் ஹக்கீம் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட அடிப்படையில் இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியா இது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இன்னுமொருவர் இன்று (28) மாவனல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.