தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென வட.மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
தொல்லியல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இவற்றினை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் கடந்த திங்கட்கிழமை கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் வட.மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வன்னி பெருநிலபரப்பில் இடம்பெறுவதால் மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
எங்கெங்கே மலைப்பகுதி காணப்படுகின்றதோ அங்கெல்லாம் பௌத்த ஆலயங்களை அடாத்தாக அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது ஒருபுறமும் தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலய பிரதேசங்களை பௌத்த பிரதேசங்களாக மாற்றுவதும் அவற்றின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வதுமாகவே இத் திணைக்களத்தின் செயற்பாடுகள் உள்ளன.
உதாரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலர் பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் பற்றி குறிப்பிடலாம். தமிழ் மக்களின் வரலாறு மற்றும் உணர்வுகள் கணக்கில் எடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. எனவே இத் திணைக்களங்களின் இரண்டாம் நிலை உயர் அதிகாரி கட்டாயமாக ஒரு தமிழராக இருப்பது உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
தொல்பொருளியல் திணைக்களம் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எந்த ஒரு இடத்தையும் தொல்லியல் ஒதுக்கு பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு அல்லது தலையிடுவதற்கு முன்பு அந்தந்த பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் கலாச்சார உத்தியோகத்தர் மூலம் மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளரின் ஒத்திசைவை பெற்றுக்கொள்வது அவசியமானது.
இவற்றை அரசாங்கத்தின் நிர்வாகப் பணிப்புரைகள் மூலம் நிறைவேற்ற முடியும் என்பதால் அவற்றிற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.