கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் சில பிரதான பாதைகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்தை மேற்கொள்ள பொது மக்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும், இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெளியேறிய நீர் மற்றும் அக்கராயன், பிரமந்தனாறு, கலமடுக்குளம், கரியாலை மற்றும் நாகபடுவான் போன்ற குளங்கள் வான் பாய்ந்தமையினால் வெளியேறிய நீராலும் பிரதான வீதிகள் பெருமளவு சேதமடைந்துள்ளன.
இதேவேளை கல்மடு குளத்திலிருந்து வெளியேறிய நீரினால் தர்மபுரம், கல்லாறு, நெத்தலியாறு போன்ற பகுதிகளின் குடியிருப்பு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் இரணைமடு குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டமையினால் வட்டக்கச்சி – கிளிநொச்சி வீதியின் பன்னங்கண்டி பகுதியின் வீதிகள் முழுமையாக அரிக்கப்பட்டு பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் வீதிகளை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தற்காலிகமாக புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தெரிவிக்கின்றனர்.