15 ஆயிரம் குழந்தைகளுக்கு வீட்டுப் பிரசவம்: பத்மஸ்ரீ விருது பெற்ற சுலாகிட்டி நரசம்மா மரணம்!

3794 0

கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க உதவியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ‘சுலாகிட்டி’ நரசம்மா (98) இன்று காலமானார். 

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசம்மா. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவரது முன்னோர்கள் நாடோடிகள் வம்சத்தினராக இருந்தனர்.

கல்வியறிவு இல்லாத நரசம்மாவுக்கு 12-வது வயதில் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு பிறந்த 12 குழந்தைகளில் 4 மகன்கள் சிறுவயதில் இறந்து விட்டனர்.

1940-ம் ஆண்டில் சுமார் 20 வயது பெண்ணாக இருந்தபோது இவரது அத்தைக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்த்த தனது பாட்டி மரிகெம்மா என்பவருக்கு நரசம்மா உறுதுணையாக இருந்தார்.

இதன்மூலம் பிரசவம் பார்க்கும் முறையை தனது பாட்டியிடம் கற்றுகொண்ட நரசம்மா தங்களது உறவினர்கள் வீட்டில் நடந்த பிரசவங்களை பின்னர் தனியாக பார்க்க ஆரம்பித்தார்.

இதனால், கன்னட மொழியில் ‘வீட்டில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி’ என்னும் பொருள்படும் ‘சுலாகட்டி’ என்ற துணை பெயர் நரசம்மாவுடன் ஒட்டிக் கொண்டது.

காலப்போக்கில் பிரசவம் பார்க்கும் கலையில் கைதேர்ந்த மருத்துவச்சியாக மாறிவிட்ட ‘சுலாகட்டி’ நரசம்மா, கிருஷ்ணாபுரா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெகு சீக்கிரம் பிரபலமாக தொடங்கினார். சரியான வாகன போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத பல பகுதிகளுக்கு இவர் சிரமப்பட்டுச் சென்று பிரசவம் பார்த்து வந்தார்.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் நிலை எப்படி இருக்கிறது? என்பதை அறிந்து சொல்லும் அளவுக்கு 
காலப்போக்கில் இந்த தொழிலில் அவர் நிபுணத்துவம் பெற்றார். கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மருந்து, பிறந்த குழந்தைக்கு புகட்டும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆகியவற்றையும் நாட்டு வைத்திய முறையில் வீட்டில் தயாரிக்க ஆரம்பித்தார்.

தன்னை உதவிக்கு அழைத்தவர்களில் பலரிடம் பணம் ஏதும் கட்டணமாக வாங்காமல் இலவசமாகவே மருத்துவம் பார்க்கும் சேவையை செய்துவந்த நரசம்மா இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளின் பிறப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்த துறையில் சுமார் 70 ஆண்டுகளாக இவர் ஆற்றிய அரும்சேவையை பாராட்டி கடந்த 2012-ம் ஆண்டில் ‘இந்தியாவின் சிறந்த குடிமகள்’ விருது நரசம்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சிறப்புக்குரிய நான்காவது விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை இந்த ஆண்டு அவர் பெற்றார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் பெங்களூரு நகரில் நரசம்மா (98) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment