கடந்த நாட்களில் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக இம்முறை நத்தார் தின சிறைக் கைதிகள் விடுதலையை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் 2 மாதங்களுக்கு முன்னரேயே நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, அமைச்சினூடாக பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதியின் அனுமதி கோரப்படவிருந்தது. இருப்பினும், கடந்த அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், இன்று (25) விடுதலை செய்யப்படவிருந்த சிறைக் கைதிகள் தடைப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் தலதா அத்துகொரல அடுத்த வாரம் அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பின்னர் இந்த கைதிகள் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
நத்தார் தின சிறைக் கைதிகள் விடுதலையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.