மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நியூசிலாந்து பயணமாகிறார்.
நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர் அந்நாட்டு பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்களை சந்திக்க இருக்கிறார்.
இலங்கை பிரதமர் ஒருவர் முதற்தடவையாக நியூசிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு பொருளாதாரம், பிராந்திய பொருளாதாரம் உட்பட பல விடயங்கள் குறித்து இருநாட்டு பிரதமர்களும் ஆராய உள்ளதாக தெரிய வருகிறது.
இது தவிர பால்மா உற்பத்தி தொடர்பாகவும் ஆராயப்பட உள்ளது.
ஓக்லாந்து, வைகடோ மற்றும் வொலிங்டன் நகரங்களை அண்டியதாக இடம்பெறும் உத்தியோகபூர்வ வியாபார மற்றும் சமூக நிகழ்வுகள் பலவற்றில் பிரதமர் அடங்கலான தூதுக்குழுவினர் பங்குபற்ற உள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் நியூசிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.