புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா – அரசாணை வெளியீடு!

4083 0

அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. 

அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. 

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 11.7.2018 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்பதன் மூலம் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான நெறிமுறைகளை வகுப்பது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

அந்த கலந்தாய்வில், சிறப்பு வரைமுறை திட்டத்துக்கான வரைவு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசுக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரை அனுப்பினார். அந்தப் பரிந்துரையை ஏற்று, ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு வரைமுறை திட்டத்துக்கான நெறிமுறைகளை வகுத்து அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, கடந்த 5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்து பட்டா வழங்க கோரிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. அனைத்துவிதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்துவிட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் இந்தத் திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆவர்.

அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவர்களின் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஊரகப் பகுதியில் 4 சென்ட், நகர்ப் பகுதியில் இரண்டரை சென்ட், மாநகராட்சிப் பகுதியில் 2 சென்ட் அளவுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கலாம்.

சென்னை மாநகராட்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னை மாநகர் சூழ் பகுதிகள், இதர மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வரைமுறைப்படுத்துவதற்கு உள்ள தடையாணை தொடரலாம். மற்ற நகரங்களில் தடையாணையை விலக்கி மாவட்ட அளவிலான குழுவின் நடைமுறைகளை பின்பற்றி வரைமுறை செய்யலாம்.

நீர்நிலை போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அவர்களை குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டும்.

மேய்க்கால், மந்தைவெளி, சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிப்போரையும் முடிந்த அளவில் அதே முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டும்.

இந்த சிறப்பு வரைமுறைத் திட்டத்தை 6 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Leave a comment