ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு!

82529 0

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகளை ரத்துசெய்தும், ஆலையை திறக்க அனுமதி வழங்கியும் கடந்த 15-ந்தேதி தீர்ப்பு கூறியது.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசு அப்படி மேல்முறையீடு செய்தால், தங்களுடைய கருத்தையும் கேட்டு அறியவேண்டும் என்று கோரி ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்றும், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை கடந்த 19-ந்தேதி விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், “தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதற்கு வருகிற மார்ச் மாதம் 14-ந்தேதி வரை அவகாசம் உள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறதா? இல்லையா? என்பதை வருகிற ஜனவரி 21-ந்தேதி இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். அதுவரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டில்தான் செய்ய முடியும். எனவே, இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரித்து உத்தரவு வழங்கி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தங்கள் உத்தரவு இணையதளத்தில்தான் வெளியிடப்படும் என்றும், திறந்த அமர்வில் வழங்கப்படாது என்றும், அறிவித்த போது எதிர்மனுதாரர்கள் அல்லது இடையீட்டு மனுதாரர்கள் யாரும் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

ஆனால் ஐகோர்ட்டில் அந்த ஆட்சேபணை ஏற்கப்பட்டு உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும், தீர்ப்பாயம் நியமித்த நிபுணர் குழு முன்பும் இடையீட்டு மனுதாராக ஆஜரான பாத்திமா பாபு தரப்புக்கு ஸ்டெர்லைட் தரப்பு ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு உள்ளன. நிபுணர் குழு முன்பு இடையீட்டு மனுதாரராக பாத்திமா பாபுவின் தரப்பு விசாரிக்கப்பட்டது.

எனவே தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான அவருடைய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட்டு இருக்கவேண்டும். அவரது மனுவை மதுரை ஐகோர்ட்டு விசாரித்து பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. 

Leave a comment