நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் மழை காரணமாக வவுனியா வடக்கு பகுதியே அதிகம் பாதிப்படைந்துள்ளது. அதன்படி வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும், கனகராயன்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், நைனாமடு கிராம அலுவலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரும்,
மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேரும், மாறா இலுப்பை கிராம அலுவலர் பிரிவில் ஓரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும், கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரும், கனகராயன் குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேருமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்துடன், மழை தொடரும் பட்சத்தில் பாதிப்புக்கள், விவசாய அழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்