52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள் – நிலாந்தன்

447 0

‘மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு நிலைகளை மீளச் சிந்திக்கவும் மீட்டுப் பார்க்கவும் மீள உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது.’   –   பேராசிரியர்.மைத்ரீ விக்ரமசிங்க(ரணில் விக்ரமசிங்கவின் துணைவி)

52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் முடிவிற்கு வந்துவிட்டது. இதன் விளைவுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

முதலாவது விளைவு- மைத்திரியை அது நவீன துக்ளக் மன்னனாக வெளிக்காட்டியிருக்கிறது. இலங்கைத்தீவை இதுவரையிலும் ஆண்ட அனைத்துத் தலைவர்களிலும் அதிகம் பரிகசிக்கப்பட்ட கேவலமாக விமர்சிக்கப்பட்ட ஒரு தலைவராக அவர் காணப்படுகிறார். உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் அவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த இமேஜ் படு மோசமாக நொறுங்கிப் போய்விட்டது. மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண் செயற்பாட்டாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்; ‘2015ல் பொது வேட்பாளர் இப்பொழுது பொது எதிரி’ என்று. சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிப் பகிடியாக எழுதப்படும் பதிவுகள் அவரை ஏறக்குறைய மற்றொரு புலிகேசி மன்னனாக சித்தரிக்கின்றன. போதாக்குறைக்கு அவருடைய மகள் எழுதிய ‘ஜனாதிபதி அப்பா’ என்ற நூலும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு சற்று முன்னரே வெளிவந்தது. அந்த நூலில் கூறப்பட்ட சில தரவுகளை அடிப்படையாக வைத்து மைத்திரியின் ஆளுமையை கேலி செய்யும் பதிவுகள் அதிகமாகப் பகிரப்பட்டன. மைத்திரியை ஒரு கேலிப் பொருள் ஆக்குவதற்கு அந்த நூலில் கூறப்படாத விடயங்களையும் கற்பனையாக சிருஸ்டித்து பதிவுகளைப் போடுவதற்கு அந்த நூலும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் முடிவிற்கு வந்தபின் மைத்திரி கோவணத்தோடு மண்வெட்டியையும் தூக்கிக் கொண்டு பொலநறுவைக்குப் போகும் பேருந்தில் ஏறுவதாக சித்திரிக்கும் பதிவுகளும், கார்ட்டூன்களும் அதிகமாகப் பகிரப்பட்டன. 52 நாள் ஆட்சிக்கவிழ்ப்பு நாடகத்தில் வெளிவந்த கார்ட்டூன்கள் எல்லாவற்றிலும் மைத்திரி ஒரு கோமாளியாக அல்லது ஜே.வி.பியும் சரத் பொன்சேகாவும் கூறுவது போல மனநோயாளியாக அல்லது ஸ்திரமற்றவராக அல்லது சுவாதீனமற்றவராகவே சித்தரிக்கப்பட்டார். அதே சமயம் ரணில் மறுபடியும் பதவியேற்ற பின் மைத்திரி ஆற்றிய உரையில் தன்னைக் கடாபியைப் போலக் கொல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிடுகின்றார். அவரைக் கடாபியோடு ஒப்பிட முடியாது. பெரும்பாலான தமிழ் முகநூல் உலாவிகள் அவரை மன்னன் புலிகேசியோடுதான் ஒப்பிடுகிறார்கள்.

ஆனால் 52 நாள் நாடகத்தில் மைத்திரி மட்டும் தான் நகைச்சுவைப் பாத்திரம் அல்ல. மகிந்தவும்தான். இருவருமே தனி மனிதர்களல்ல. சிங்கள – பௌத்த பெருந்தேசியத்தின் ஆகப்பிந்திய வளர்ச்சியான யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கும் இரண்டு தலைவர்களே அவர்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் மீழெழுச்சி பெற்ற யுத்த வெற்றி வாதம் யாப்பை அளாப்பிக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தது. யாப்பை அளாப்புவதைத் தவிர அதற்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றும் வெறியில் அது நிதானமிழந்து எல்லா விழுமியங்களையும் மீறியது. முடிவில் நீதிமன்றம் நாடகத்தை முடித்து வைத்தது. இப்படிப் பார்த்தால் யுத்த வெற்றிவாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரும் கோமாளிகளாகவோ அல்லது அரசியல் நாகரீகத்தை மதிக்காதவர்களாகவோ வெளித்தெரிகிறார்கள். ஆயின் இலங்கைத்தீவின் பெருந் தேசியவாதமானது அரசியல் நாகரீகம், அறம், விழுமியங்கள், சுவாதீனம் என்பவற்றை இழந்து விட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?

இரண்டாவது விளைவு- ஆட்சிக்குழப்பம் ரணிலின் அந்தஸ்தை உயர்த்தியிருக்கிறது. மைத்திரி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைத் தாக்கிப் பேசினார். கீழ்த்தரமாக அவமதித்தார். நட்புக்குத் துரோகம் செய்தார். நாடாளுமன்றத்தின் மாண்பினை மீறினார். ஆனால் ரணில் எல்லாவற்றையும் அமைதியாகக் கடந்து போனார். கடைசி வரை அவரொரு விடாக்கண்டனாகவே காட்சியளித்தார். ஆனால் வன்மத்தோடும், மூர்க்கத்தோடும் அவர் அதை வெளிப்படுத்தவில்லை. மாறாக அமைதியாக சாந்தமாக எல்லாவற்றையும் எதிர் கொண்டார். ஐம்பத்திரண்டு நாட்களும் அலரி மாளிகையை விட்டு வெளியேறாமல் அங்கேயே பிடிவாதமாகக் குந்தியிருந்தார். அதிலோர் ஓர்மம் இருந்தது. சாந்தமும் இருந்தது.

மனோ கணேசன் கூறுவது போல அவர் தனது போராட்டத்தைப் பல முனைகளில் முன்னெடுத்தார். ராஜதந்திரிகளின் சமூகம் மக்கள் மையப் போராட்டங்கள், நாடாளுமன்ற வழிமுறைகள், நீதிமன்றம் ஆகிய எல்லா முனைகளிலும் அவர் பதட்டமில்லாமல் அமைதியாக தன் தரப்பை முன்னெடுத்தார். தன்மீது வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனங்கள் எதற்கும் அவர் தனிப்பட்ட முறையிலோ தனிமனிதத் தாக்குதலாகவோ பதில் கூறவில்லை. அவருக்கும் தனக்கும் இடையிலான முரண்பாட்டை மைத்திரி ஒரு பண்பாட்டு முரண்பாடு என்று சொன்னார். அப்படிப் பார்த்தால் அந்த ஐம்பத்திரண்டு நாட்களிலும் அதற்குப் பின்னரும் எந்தப் பண்பாடு தனது மாண்பை நிரூபித்தது என்று பார்த்தால் நிச்சயமாக மைத்திரி தான் பிரதிநிதித்துவப் படுத்துவாகக் கூறிக்கொள்ளும் தேரவாத சிங்கள பௌத்தப் பண்பாடு அல்ல. கடந்த ஆண்டு நிகழ்ந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல ரணில் தன்னை ஒரு வலிய சீவனாக மறுபடியும் நிரூபித்திருக்கிறாரா? இது விளைவு இரண்டு.

விளைவு மூன்று- ஜே.வி.பி. தன்னை ஒரு முதிர்ச்சியான கட்சியாக வெளிக்காட்டியிருக்கிறது. இரண்டு பாரம்பரியக் கட்சிகளாலும் வேட்டையாடப்பட்ட ஒரு தரப்பு அது. இரண்டு பெரிய கட்சிகளின் கைகளிலும் ஜே.வி.பியின் இரத்தமும், சதையும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. ஜே.வி.பியைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளுமே கொடிய வேட்டைக்காரர்கள்தான். எனினும் அக்கொடிய வேட்டைக்காரர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் அளவிற்கு தன்னிடம் ஓர் அரசியல் நாகரீகம் உண்டு என்பதை ஜே.வி.பி. நிரூபித்திருக்கிறது. எனினும் ரணில் பதவியேற்ற பின் அக்கட்சிப் பிரமுகர் ஒருவர் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதாவது தமிழர்களின் விவகாரத்தில் ஜே.வி.பி தன்னுடைய முதிர்ச்சியையும் ஜனநாயக மாண்பையும் இனிமேல்தான் நிரூபிக்க வேண்டி இருக்கிறது என்று பொருள். இது மூன்றாவது விளைவு.

நாலாவது விளைவு தமிழ்த்தரப்பே ஒரு தீர்மானிக்கும் தரப்பு என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பை ஆள்வது யாரென்பதை தமிழ் மக்களே தீர்மானிக்கலாம் என்ற செய்தி கூர்மையாகக் கூறப்பட்டுள்ளது. பெருந்தேசிய வாதத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கு தமிழ்த்தரப்பும் தேவை என்பதை ரணிலுக்கு உணர்த்தியிருக்கிறது. அதே சமயம் யுத்த வெற்றி வாதத்திற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் இருந்த இணக்கமின்மை பகை நிலைக்கு வளர்ந்திருக்கிறது. தன்னைத் தோற்கடித்த தமிழ்த்தரப்பை எதுவிதத்திலாவது தோற்கடிக்கவே மகிந்தவும் மைத்திரியும் முயற்சிப்பார்கள். ரணில் பதவியேற்ற பின் மைத்திரியும் மகிந்தவும் ஆற்றிய உரைகளில் அதைக் காண முடிகிறது. அவர்கள் எதிர்காலத்தில் இனவாதத்தையே ஒரே கருவியாக கையிலேந்தக்கூடும். கொழும்பில் தமிழ்த்தரப்பு ஒரு தீர்மானிக்கும் தரப்பாக இருப்பதை எவ்வாறு இல்லாதொழிக்கலாம் என்று இனி அவர்கள் சிந்திப்பார்கள். இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு என்று வரும் பொழுது அதை அவர்கள் முழு வன்மத்தோடு எதிர்ப்பார்கள். இதனால் எதிர் காலத்தில் ஒரு தீர்வை நோக்கி யாப்பை மாற்றுவதற்கு வேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது சவால்கள் மிகுந்ததாக மாறியிருக்கிறது. இது நாலாவது விளைவு.

ஐந்தாவது விளைவு முஸ்லிம் கட்சிகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகரித்த முதிர்ச்சியையும், நிதானத்தையும் வெளிக்காட்டியிருக்கின்றன. பொதுவாக முஸ்லிம் கட்சிகள் வர்த்தக நோக்கு நிலையிலிருந்து வெல்லக்கூடிய தரப்பின் பக்கம் சாய்ந்துவிடும் என்று நிலவிய முற்கற்பிதங்கள் இம்முறை தகர்க்கப்பட்டுவிட்டன. மகிந்த நினைத்தது போல காசைத்தள்ளி முஸ்லிம் தலைவர்களை விலைக்கு வாங்க முடியவில்லை. ஜே.வி.பியைப் போலவே முஸ்லிம் கட்சிகளும் தமது கண்ணியத்தை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பம் இது.அதாவது, மகிந்த-மைத்திரி அணிக்கு காட்டப்பட்ட எதிர்ப்பு பல்லினத்தன்மை மிக்கது

ஆறாவது விளைவு- இலங்கைத்தீவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பு அதன் சுயாதீனத்தை, கண்ணியத்தை எண்பித்திருப்பதான மிகக் கவர்ச்சியான ஒரு தோற்றம் எழுந்திருக்கிறது.இது அனைத்துலக விசாரணைக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளைப் பலவீனப்படுத்தக்கூடியது. தமிழ்த் தரப்பின் உதவியோடு இலங்கைத் தீவின் நீதி பரிபாலனக் கட்டமைப்புக்கு வெள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது.

ஏழாவது விளைவு- கூட்டமைப்புக்குள் சுமந்திரனின் முதன்மை கேள்விக்கிடமின்றி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதோடு மேற்கு நாடுகளின் ராஜதந்திர சமூகத்தில் சுமந்திரனின் அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது .

மேற்கண்ட ஏழு விளைவுகளையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு பொதுச் சித்திரம் கிடைக்கும். சிங்கள – பௌத்த பெருந்தேசியத்தின் ஆகப்பிந்திய வளர்ச்சியான யுத்த வெற்றி வாதத்திற்கு எதிராக ஏனைய சிறிய இனங்களும், சிறிய கட்சிகளும் ஓரணியாகத் திரண்டு நின்று நாடாளுமன்றத்தைப் பாதுகாத்திருக்கின்றன. அதே சமயம் ஆட்சியைக் குழப்பிய காரணத்தால் யுத்த வெற்றி வாதத்திற்குத் தலைமை தாங்கிய இருவரும் அரசியல் நாகரீகமில்லாத தலைவர்களாக தம்மை வெளிக்காட்டியிருக்கிறார்கள். மறுபக்கத்தில் ரணில் விக்கிரமசிங்க தன்னை ஒரு வலிய சீவனாக எண்பித்திருக்கிறார். ஆட்சிக் குழப்பத்தின் விளைவாக ரணிலின் அந்தஸ்து உள்நாட்டிலும் வெளியரங்கிலும் அதிகரித்திருக்கிறது. அவர் மீதான அனுதாபமும் அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே அவர் வெளியரங்கில் பலமாகவும் உள்நாட்டில் பலவீனமாகவும் காணப்பட்ட ஒரு தலைவர். ஆட்சிக்குழப்பத்தின் பின் படித்த சிங்கள நடுத்தர வர்க்கம் அவரை அனுதாபத்தோடு பார்க்கிறது. ஏற்கெனவே அந்த நடுத்தர வர்க்கத்திற்குள்தான் அவருக்கு ஆதரவாளர்கள் அதிகம். சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் இந்த அனுதாபம் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அது தேர்தலில் வாக்குகளாக மாறும்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நல்லாட்சி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழுத்திழுத்துச் சொதப்பியதனால் ரணில் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார். அவரை ஆதரித்த லிபரல் ஜனநாயகவாதிகள் மத்தியிலும் அவருக்கிருந்த கவர்ச்சி குறைந்து விட்டது. ஆனால் மைத்திரியும், மகிந்தவும் சேர்ந்து ரணிலை அந்த வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றி விட்டார்கள் போலத் தெரிகிறது. ஐம்பத்திரண்டு நாள் ஆட்சிக் குழப்பத்தில் வெற்றி நாயகராக அவர் மேலெழுந்துள்ளார்.

கூட்டமைப்பின் உயர்மட்டம் அதைத் தனது வெற்றியாகவும் கொண்டாடுவது தெரிகிறது. ஆனால் தமிழ் மக்கள் அதைத் தமது வெற்றியாக எப்பொழுது கொண்டாடுவார்கள்? இலங்கை நாடாளுமன்றத்தின் ஜனநாயக மாண்பு பெற்ற வெற்றியைஇ யாப்புப் பெற்ற வெற்றியை, நீதிமன்றம் பெற்றுக்கொடுத்த வெற்றியை தமிழ் மக்கள் தங்களுக்குமுரியதாக எப்பொழுது கொண்டாடுவார்கள்?

இந்த வெற்றியை தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியற் தீர்வாக ரணில் மாற்றிக் காட்டினால் தமிழ் மக்கள் அவ்வாறு கொண்டாடக்கூடும். படித்த தமிழ் மக்களில் அதிகமானவர்கள் ரணிலை ஒரு நரி என்றே பார்க்கிறார்கள். இருக்கலாம். அவர் எப்பொழுது நரியாகினார்? தனக்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கு விசுவாசமாக அதே சமயம் தமிழ் மக்களுக்கு எதிராக காய்களை நகர்த்திய போதுதான். அதாவது அவர் தனது வாக்காளர்களுக்கு விசுமானவராக இருக்கிறார். அதுபோலவே தமிழ்த் தலைவர்களும் தமது வாக்காளர்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டால் சிங்களக் கடும்போக்காளர்கள் அவர்களையும் நரிகளென்றோ புலிகளென்றோதான் அழைப்பார்கள்.

ரணில் தனது வாக்காளர்களைக் காப்பாற்றியிருக்கிறார். தனது எஜமானர்களான மேற்கு நாடுகளைக் காப்பாற்றியிருக்கிறார். கூட்டமைப்பு ரணிலைக் காப்பாற்றியிருக்கிறது. எனவே மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் காப்பாற்றியிருக்கிறது. ஆனால் தனக்கு வாக்களித்த மக்களைக் காப்பாற்றுமா? தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்றுமா? சிங்கள – பௌத்த பெருந்தேசியத்தின் ஆகப்பிந்திய வளர்ச்சியான யுத்த வெற்றி வாதமானது பழிவாங்கும் உணர்ச்சி மிக்க ஒரு பகை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அரசியற் சூழலில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை இனிக் கொண்டுவர முடியுமா? இலங்கைத் தீவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பின் மதிப்பு உயர்ந்திருக்கும் ஓர் அரசியற் சூழலில் அனைத்துலக நீதி விசாரணைக்கான கோரிக்கை என்னவாகும்? உள்நாட்டிலும் தீர்வுக்கான வாய்ப்புக்கள் பலவீனமடையக்கூடும்.அனைத்துலக அளவிலும் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பலவீனமடையக்கூடும்.ஆயின் ஆட்சிக் குழப்பத்தின் விளைவு தமிழ் மக்களுக்கு வெற்றியா தோல்வியா?

Leave a comment