தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வரி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 2017-2018-ம் நிதி ஆண்டில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.5,454 கோடி வரி இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.455 கோடி மற்றும் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூ.2,775 கோடி வருவாய் இழப்பு தொகை நிலுவையில் உள்ளது என்றும் கூறினார். இந்த நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் தமிழக வணிக பிரதிநிதிகள், வணிக கூட்டமைப்பிடம் இருந்து பெறப்பட்ட வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை யும் அவர் வலியுறுத்தினார்.
கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரி குறைப்பு
சரக்கு, சேவை வரியின் கீழ் மொத்தம் 1216 பொருட்கள் வருகின்றன. இதில் 48 சேவைகளும் அடங்கும். 1216 பொருட்களில் 500 பொருட்களுக்கு 18 சதவீதம் வரிவிதிப்பு மூலம் 60 சதவீதம் வருவாய் ஈட்டப்படுகிறது. அதைப்போல 300 பொருட்களுக்கு 12 சதவீத வரிவிதிப்பு மூலம் 13 சதவீதம் வருவாய் ஈட்டப்படுகிறது. வெறும் 34 பொருட்கள் மட்டும்தான் 28 சதவீத வரியில் இருக்கிறது. இதன்மூலம் 22 சதவீதம் வருவாய் கிடைக்கிறது. 340 பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பில் உள்ளன. இவற்றின் வருவாய் 3 சதவீதம் ஆகும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வரிச்சலுகை அளிக்க தமிழக அரசு வலியுறுத்தியதன் அடிப்படையில் மாநிலங்களே அது தொடர்பாக கூட்டம் நடத்தி தகவல் தருமாறு கூறினார் கள். அதன்படி எங்கள் கருத்தை தெரிவித்தோம்.
இன்றைய கூட்டத்தில் பல பொரு ட்கள் மீது வரி குறைக் கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.