நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க தேர்தலில் வெளிநாடுகள் தலையீடா?

453 0

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த நாட்டின் உளவு அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளன.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என எழுந்துள்ள புகார் பற்றி ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த நவம்பர் 6-ந் தேதி, ஒட்டுமொத்த பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 33 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தல், டிரம்பின் 2 ஆண்டு கால ஆட்சிக்கான பொது வாக்கெடுப்பாக கருதப்பட்டதால் உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த தேர்தலிலும் ரஷியா தலையிட முயற்சிப்பதாக புகார் எழுந்தது. அத்துடன் சீனாவும் இந்த தேர்தலில் தலையிட முயற்சிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புகார் தெரிவித்தார். இதை சீனா திட்டவட்டமாக மறுத்தது. பிற எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் சீனா தலையிட்டதே இல்லை என அந்த நாட்டு அரசு கூறியது. ஈரான் மீதும் புகார் கூறப்பட்டது.

தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கூடுதலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதேபோன்று செனட் சபை தேர்தலில் குடியரசு கட்சி அதிக இடங்களை பிடித்தது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபை தேர்தலில் எந்தவொரு வெளிநாடும் தலையிடவில்லை என அமெரிக்காவின் 17 முன்னணி உளவு அமைப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன.

இதுபற்றி தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் டான் கோட்ஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

நமது நாட்டின் தேர்தல் உள்கட்டமைப்பில் எந்த சமரசமும் நடைபெறவில்லை. வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலோ, ஓட்டு எண்ணிக்கையை தடுக்கவோ, ஓட்டு எண்ணிக்கையை சரிபார்க்கவோ தடைகள் செய்யப்பட்டன என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

2018-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரஷியா, சீனா, ஈரான் உள்ளிட்ட பிற நாடுகள் தங்கள் நலன்களை மேம்படுத்திக்கொள்வதற்காக, அமெரிக்காவை இலக்கு வைத்து நடவடிக்கைகள் எடுத்ததற்கோ, பிரசாரங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியதற்கோ ஆதாரம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Leave a comment