படையினர் வசமுள்ள காணிகளின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது: சத்தியலிங்கம்

692 0

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வவுனியா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப சத்தியலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக தெரிவிக்கையில், 

வடக்கு ,கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் விசேட செயலணிக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் அரச படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றது. எனினும் வவுனியா மாவட்டத்தில் 1.83 ஏக்கர் காணி மட்டுமே இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ளதாக அரசாங்கத்தினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. அதாவது 56ஆவது பிரிகேட் இராணுவ படைமுகாம் அமைந்துள்ள பேயாடி கூழாங்குளம் பாடசாலை காணி மட்டுமே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் காணப்படுகிறது இது முற்றிலும் தவறான தகவலாகும்.

பிரதேச செயலாளர்களின் அறிக்கையின்படி வவுனியா மாவட்டத்தில் 184.6 ஏக்கர் காணி நீண்டகாலமாக அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் 133.6 ஏக்கர் தனியார் காணிகளாகவும் 45 ஏக்கர் காணிகளாகவும் காணப்படுகின்றது.

இதனைவிட செட்டிகுளம் பிரதேசத்தில் மாணிக்கம் பண்ணை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணி இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் சரியான தகவல்கள் அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

கடந்த மாதம் வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சரியான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லையென ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தேன். எனவே அரசாங்கம் உரிய முறையில் சரியான தகவல்களை திரட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment