ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது,
குறித்த நபர் கஞ்சா போதை பொருளை தமது உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதனை கேள்வியுற்ற, குறித்த நபரால் கைவிடப்பட்ட அவரது மனைவி ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்று , குறித்த நபர் தனது கணவர் எனவும் ,கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் தான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் போது தன்னை கைவிட்டு சென்றதாகவும் ,அதனால் தனது பிள்ளைக்கு பிறப்பு சான்றிதழ் பெற முடியாதுள்ளது எனவும், அதனால் பிள்ளைக்கு பிறப்பு சான்றிதழ் பெற தந்தையாக அவரை கையொப்பம் வைக்க நடவடிக்கை எடுக்க கோரி முறைப்பாடு செய்தார்.
இந்நிலையில் குறித்த நபரின் கஞ்சா உடமையில் வைத்திருந்தமை தொடர்பிலான வழக்கு கடந்த வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அ. ஜூட்சன் முன்னிலையில் , எடுத்து கொள்ளப்பட்ட போது , பொலிஸார் பெண்ணின் முறைப்பாடு தொடர்பில் B அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதேநேரம் குறித்த பெண்ணும் அவரது 13 வயது மகனும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர். அவரை அழைத்த நீதிவான் , சந்தேக நபரிடம் குறித்த பெண்ணை காட்டி இவரை தெரியுமா ? என வினாவினார். சந்தேக நபர் ஆம் என பதிலளித்தார்.
பின்னர் அவரது மகனை காண்பித்து இவரை தெரியுமா ? என வினாவினார். அதற்கு சந்தேகநபர் மௌனம் சாதித்தார். அதனை அடுத்து இந்த பெண் முன் வைத்துள்ள குற்றசாட்டை ஏற்றுக்கொள்கின்றீரா ? என வினாவினார். அதற்கு சந்தேக நபர் ஆம் என பதிலளித்தார்.
அதனையடுத்து நீதிவான் , சந்தேக நபரை ஊர்காவற்துறை பொலிஸாரின் பாதுகாப்புடன் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு அழைத்து சென்று பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் கையொப்பம் வைக்க நடவடிக்கை எடுக்க சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு பணித்தார்.
அதனால் 13 வருடங்களின் பின்னர் தந்தையாக தனது மகனின் பிறப்பு சான்றிதழில் குறித்த நபர் கையொப்பமிட்டார்.