பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பா.ம.க. யாரிடமும் பேச தொடங்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து பாராளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்த வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிட்டு ஆறுதல் சொல்லாதது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். மாற்றி அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேர்தல் வர இருப்பதால் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்துவதாக அறிவிப்பார்கள். ஆனால் அதற்கான நிதி தற்போது அரசிடம் உள்ளதா? என தெரியவில்லை.
கணினிகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் 10 துறைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு. ஜனநாயக நாட்டில் கெடுபிடிகள் இருக்க கூடாது. தேர்தல்நேரம் என்பதால் எதிர்கட்சிகளை கூர்ந்து கவனிக்கும் சூழல் ஏற்படும்.