இரவு பெய்த கன மழையால் முல்லைத்தீவின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு – குமுழமுனை பிரதான வீதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
இதனால் அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பலரும் பலத்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
குமுழமுனை வீதியின் குறுக்காக காணப்படுகின்ற இரு ஆறுகள், இரவு பெய்த கனமழையால் பெருக்கெடுத்து, பாலத்தின் மேல் மேவிப் பாய்கின்றது. இதனாலேயே அவ்வீதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதனால் இவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பலத்த சிரமங்களுடன் பயணிக்கின்றனர்.
அத்துடன் இவ்விரு ஆறுகளும் பெருக்கெடுத்து பாய்வதால் முறிப்பு பகுதியில் விவசாயம் செய்யப்பட்டுள்ள நெல் வயல்கள், தட்டா வயல் போன்ற வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கன மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவின் பாதிப்பு நிலைபற்றி அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோது,
உரிய இடங்களுக்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், பாதிப்பின் முழு விபரங்களைத் திரட்டி பிற்பகல் 2:00மணியளவில் தருவதாகவும் கூறினார்.