விளையாட்டுத்துறையை தூய்மைப்படுத்தும் வருடமாக இந்த வருடத்தைக் கருதுகின்றேன்-ஹரின்

616 0

கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் ஊழல் மோசடி மிக்க நாடுகளில் நமது நாடுதான் முதலிடத்தில் இருக்கின்றது. இது வெட்கத்துக்குரியதாகும் என ஹரின் பெர்னாண்டோ  தெரிவித்தார்.

எனவே இலங்கை கிரிக்கெட் துறையில் நிலவும் மோசடிகளைக் களைந்து தூய சிந்தையோடு கிரிக்கெட் வளர்ச்சிக்கு சேவையாற்றுபவர்களைத் தேர்ந்தெடுக்கும்வரை இடைக்கால நிருவாக சபை ஒன்றை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றேன். 

இது குறித்து தீர்மானம் எடுக்கவேண்டிவரும் என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை பொறுப்பேற்ற ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தொலைத்தொடர்புகள், டிஜிட்டல், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, விளையாட்டுத்துறை ஆகிய நான்கு அமைச்சுப் பதவிகளை ஏற்ற அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்றுமுற்பகல் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் விளையாட்டுத்துறை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர்களைப் பிரத்தியேகமாக சந்தித்தபோதே விளையாட்டுத்துறையில் நிலவும் மோசடிகளைக் களைந்து சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அமைச்சர் ஹிரன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிருவாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகள், ஊழல்மோசடிகள் ஆகியவற்றை ஆராய்ந்து தூய சிந்தை உடையவர்களை, இதய சுத்தியோடு பணியாற்றக்கூடியவர்களை தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய அமைச்சர், இடைக்கால நிருவாக சபை ஒன்றை நியமிப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்தும் இலங்கையில் ஐ சி சியின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரிகளை எதிர்வரும் 26 அல்லது 27ஆம் திகதியன்று சந்திக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அல்லது குழாத்துக்கு 20 வீரர்கள் வரைத் தெரிவு செய்யப்படுகின்றபோதிலும் இலங்கையில் கிரிக்கெட் விளையாடும் சுமார் 600 முதல் 700 வீரர்களில் பெரும்பாலானவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் மனம் நொந்துபோகின்றனர்.இந்த நிலை மாறவேண்டும். எனவே இரண்டாம்; நிலை அணிகளை உருவாக்குவதற்கான சூழ்நிலை ஏற்படவேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் கருதி அறிமுகப்படுத்தவேண்டிய பல விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை குமார் சங்கக்காரவும் மஹேல ஜயவர்தனவும் தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கும் தனக்கு எனவும் அவர் தெரிவித்தார். அவர்களுடன் கலந்துரையாடி கிரிக்கெட்டின் நலன் கருதி நல்ல முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறத்தவறவில்லை.

இலங்கையில் பல விளையாட்டுத்துறைகளுக்கு ஒளிபரப்பு சேவை இல்லாதது பெருங்குiறாயாகும். தொலைத்தொடர்பு வசதிகள் இருப்பதால் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக ஒவ்வொரு விளையாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு ஒளிபரப்பு சேவை ஒன்றை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிரேஷட் மெய்வல்லுநர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளமை, கனிஷ்ட மெய்வல்லுநர்கள் ஏழு பேருக்கு மாதாந்தம் வழங்கப்பட்டுவந்த 75,000 ரூபா இரண்டு மாதங்களுடன் நிறுத்தப்பட்டமை குறித்து அமைச்சரிடம் வினவியபோது, இந்த விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதலிளித்தார்.

இலங்கையில் விளையாட்டுத்துறை என்பது கிரிக்கெட் விளையாட்டு மாத்திரமல்ல என் நான் நம்புகின்றேன். விளையாட்டுத்துறை அமைச்சு என்றவுடன் பலர் கிரக்கெட் பிரச்சினையைத் தான் கேட்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டை விட வெற்றிபெறக்கூடிய, சர்வதேச அரங்கில் எமது இளையோரைக் வெற்றிபெறச்செய்யக்கூடிய இன்னும் பல விளையாட்டுக்கள் இருக்கின்றன. எனக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் கிடைத்திருப்பதால் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு இன்னும் ஏதுவாக இருக்கும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எதுவுமற்ற ஒரே ஒரு துறைதான் விளையாட்டுத்துறை. 

எனவே விளையாட்டுத்துறை மூலம் எவ்வாறு அந்நியோன்னியத்தை, சமரத்தை, நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது என்பது குறித்து சிந்திக்கவேண்டும். அத்துடன் எமது வீர, வீராங்கனைகளை எவ்வாறு சர்வதேச மட்டத்துக்கு கொண்டுசெல்வது என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்றார் அமை;சசர் ஹரின் பெர்னாண்டோ. 

அரசியலுக்கு அப்பால், இனவாதத்துக்கு அப்பால், மதவாதத்துக்கு அப்பால் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரே ஒரு இடம் விளையாட்டுத்துறையாகும். எனவே விளையாட்டுத்துறையை பாதுகாத்து நாட்டை சுபிட்சம் அடையச் செய்வற்கான முதற்படியை எம்மால் ஆரம்பிக்க முடியும் என நம்புவதாக அவர் கூறினார்.

அண்மையில் நிலவிய அரசியல் நெருக்கடி குறித்து பேசிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,

அரசியல் ரீதியில் 51 தினங்கள் விடுமுறை என்று கூறமாட்டேன். கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வாழ்க்கையில் பெறவேண்டிய அதிசிறந்த அனுபவத்தைப் பெற்ற காலம் என்று தான் நான் தனிப்பட்டவகையில் நம்புகின்றேன். அனைத்தையும் இழப்பதற்கு ஒரு கணப்பொழுதுதான் தேவை. ஆனால் அதனை மீண்டும் அடைவதாக இருந்தால் கடும் போராட்டத்தை நடத்தியே ஆகவேண்டும். 

அவ்வகையில் நாங்கள் புத்துயிர் பெற்றவர்களாக மீண்டு வந்துள்ளோம். அதனை வெறுமனே கொள்ளாமால் நம்பிக்கையுடன் முன்னோக்கி நகரவுள்ளோம். எங்கள் மத்தியிலும் இடம்பெற்ற சில குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு இதயசுத்தியுடன் செயலாற்றுவதையே எதிர்பார்க்கின்றேன். S

Leave a comment