அரசியல் சதித்திட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திசெய்ய இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும். அத்துடன் கடந்த ஐம்பது நாட்களில் 950 டொலர் மில்லியன் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது. இது இவர்கள் நாட்டுக்கு செய்த பாரிய துரோகமேயாகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
நீதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வந்தது. இந்த காலப்பகுதியில் 100க்கும் அதிகமான அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் இவர்கள் அந்த காலப்பகுதியில் மக்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் சதித்திட்டத்தினால் ஆட்சிக்கு வந்து எரிபொருட்களின் விலை குறைத்தும் சில வரிகளை குறைத்தும் மக்களுக்கு நிவாணம் வழங்கியதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இவர்களின் 10வருட ஆட்சியில் எரிபொருட்களின் விலை எந்த இடத்தில் இருந்தது என்பதை மறந்துள்ளனர். அதேபோன்று எரிபொருட்களின் விலையை குறைக்குமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் இவர்கள் மதிக்காமல் செயற்பட்டனர்.
ஆனால் தற்போது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவிக்கின்றனர். அதேபோன்று 2015 நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. சைட்டம் பிரச்சினை தீவிரமடைந்திருந்தது என அவர் தெரிவித்தார்.