வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவருடன் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோவின் வழிநடத்தலில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கண்காணிப்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஜெனத் பொன்சேகாவின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்தா சேனாநாயக்கவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் இலங்க ரட்ண, வன்னிநாயக்க மற்றும் சமிந்த ஆகியோர் நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை இனிப்பு பண்டங்களே கைப்பற்றப்பட்டன.
போதை கலக்கப்பட்ட பல்வேறு வகையிலான சுமார் 7 ஆயிரம் இனிப்பு பண்டங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் கைதுசெய்யப்பட்ட வரக்காபொலவை சேர்ந்த நபரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதுடன் இனிப்பு பண்டங்களை இரசாயன பகுப்பாய்வுக்கும் உட்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.