நாட்டில் பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை தீர்க்கும் முகமாக ஜனநாயக ரீதியாக போராடி தோற்றுப் போன முன்னாள் தமிழ் தலைவர்களுக்குப் பின் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தேசிய தலைவர் பிரபாகரனாலும் துரதிஸ்ட வசமாக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது.
அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுத்தருவோம் என்று களமிறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வட கிழக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகளினால் வரமளித்திருந்தனர். ஆனால் அந்த வரத்தினை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதற்காக பயன்படுத்திகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் ஊடகங்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் புரயோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினை தீர்வு ஒன்றையே முன்வைத்து அதனைப் பெற்றுக் கொடுப்பதாக கூறியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வடகிழக்கு தமிழ் மக்களிடம் மீண்டும் வாக்குகளை கோரியிருந்தனர். அவர்கள் அபிவிருத்தியை பெற்றுக் கொடுப்பதாக தெரிவிக்கவில்லை என்பதனை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இன்று அவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் போல் செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயல்படுவது வடகிழக்கில் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.
நாட்டிலே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வந்திருக்கும் வரக்கூடிய எவருமே தமிழ் மக்களுக்கு எதனையும் தாரைவார்த்து கொடுக்கப் போவதில்லை. அனைவரும் பௌத்த சிங்கள வாக்குகளுக்கு அடிபணிந்து சிங்கள இனவாதத்தையே முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் கடந்த ஒன்றரை மாதமாக இடம்பெற்ற சிங்கள அரசியல் தலைவர்களின் பதவி ஆசை சண்டையினை வேடிக்கை பார்ப்பதை விடுத்து ஒரு பக்கம் சார்பாக ஜனநாயகத்தை நிலைநிருத்துவோம் என்ற அடிப்படையை காரணமாக வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயல்பட்டது வட கிழக்கு தமிழ் மக்களுக்கு தேவையானதா என்பதை கூட்டமைப்பினர் தெரிவிக்க வேண்டும்.
இதற்கு அப்பாலும் சென்று இன்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு அமைய செயல்பட்டு இழந்து நிற்கின்றனர். அது மட்டுமின்றி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக வருவதையும் தடுக்கும் முகமாக அவருக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுத்து வருவது தமிழ் மக்களுக்கு அபாயகரமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தென்னிலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை என்பது வேறு வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை புரிந்து கொள்ளாமல் செயல்படுவது தவறான விடயமாகும். சிங்கள மக்களின் மனநிலை நாளுக்கு நாள் மாறுபட்டு வருகின்றது. இன்னும் ஒன்றரை வருடங்களில் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சில சமயங்களில் நாட்டின் தலைவராக தெரிவு செய்வார்களேயாயின் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை இவர்கள் எந்த முகத்தினை வைத்து அவரிடம் பேச கூடியதாக இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை எல்லா சிங்கள தலைவர்களும் இனவாதிகளே. இனவாதிகளில் யார் சிறந்தவர் என்பது எமக்கு தேவையற்ற விடயமாகும்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பினர் எதனை பெற்றுக் கொடுப்பதற்கு நிபந்தனை வழங்கினார்கள் என்பதனை அம்பலப்படுத்த வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எமது தமிழினத்திற்கு செய்யப்பட்ட துரோகங்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டுகளுக்கு துணை சென்ற டெலோ, புளட் அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் வடகிழக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இன்று தமிழ் கூட்டமைப்பு கொழும்பு 7ல் வசிக்கும் யாழ் மாவட்ட மேல்குடி கட்சியாக மாறியிருப்பது பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட தமிழர்கள் புரிந்து கொண்டிருகின்றார்கள். நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநிறுத்துகின்றேன் என்ற பெயரில் நமது மக்களின் வாக்குகளால் கிடைக்கப்பெற்ற வரத்தின் ஊடாக சிங்கள இனவாதிகளுக்கு பக்கம் சார்ந்து செயல்பட்டு தமது இருப்பை இழந்து நிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்வரும் தேர்தலில் மக்களிடம் எதனை சொல்லி வாக்குகளைப் பெறப் போகின்றார்கள் என்பதனை காலம் பதில் சொல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.