புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது இடைக்கால கணக்கு அறிக்கைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதமர் ரணில் விக்கிரமசிஙக தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக தெரிவிக்கையில் பாராளுமன்றத்தில் நாளை கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருப்பதாக தெரிவித்தார்.
பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமும் துரிதப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமையினால் அடுத்த வருடத்திற்காக நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் ஒத்துழைப்போடு செயற்பட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தற்சமயம் நிலவும் நெருக்கடிகளை தீர்த்த்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விரிவான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்ம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சந்திராணி பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.