ஹைஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொலொன்னாவையில் வைத்து பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கசுன் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற இரண்டாம் இலக்க மன்றில் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை ஏழு நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் பரிசோதகர் சமரதுங்ககோன், உபபொலிஸ் பரிசோதகர் ரோகண பண்டாரவின் தலைமையிலான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மோசடி தடுப்பு விசேட குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போதே வேறொரு முகவருக்கு பெற்றுக்கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலொன்னாவை பகுதியிலேயே நேற்று மாலை 4.10 மணியளவில் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது கொலொன்னாவை பிரிவென வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கசுன் லக்மால் விஜேகுணவர்தன என்ற இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை கைதுசெய்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது பிரபல போதைப்பொருள் வியாபாரியான மோதர வல்லே சுரங்கவின் நெருங்கிய சகா என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபரிடமிருந்து ஹைஸ் போதைப்பொருள் 109 கிராம் 306 மில்லிகிராம் மற்றும் 807 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1.7 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.