கஜா’ புயல் நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறது வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு குற்றச்சாட்டு!

4298 0

‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு தேவையற்ற விளக்கங்களை கேட்பதாகவும், நிவாரண நிதி வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த மாதம் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை தாக்கிய கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். புயலில் சாய்ந்த தென்னை ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

இதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
புயல் நிவாரண பணிகள் குறித்து பேராவூரணியைச் சேர்ந்த முருகேசனும் மனுதாக்கல் செய்து இருக்கிறார்.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை விரைவாக செய்து கொடுக்க உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில் கஜா புயல் இடைக்கால நிவாரணமாக ரூ.353.7 கோடியை ஒதுக்கியதாக மத்திய அரசு அறிவித்தது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழு தனது இறுதி அறிக்கையை எப்போது தாக்கல் செய்யும்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் வாதாடுகையில் கூறியதாவது:-
கஜா புயல் பாதிப்பு சம்பந்தமாக மத்திய அரசு கேட்ட அனைத்து விளக்கங்களையும் தமிழக அரசு அனுப்பி வைத்து உள்ளது. ஆனாலும் சம்பந்தம் இல்லாத, தேவையற்ற விளக்கங்களை கேட்டு, நிவாரண தொகை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு ஒதுக்கிய நிதியின் மூலமாக மட்டுமே நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநில அரசுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிவாரண நிதியில் இருந்து சமீபத்தில் ரூ.353.7 கோடியை ஒதுக்கி உள்ளனர். நாங்கள் புயல் நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டும், மத்திய அரசின் நேரடி நிதியை இதுவரை தமிழகத்துக்கு ஒதுக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள். இதுதொடர்பாக நாங்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை ஏதாவது ஒரு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு வாதிடும் போது, “புயல் பாதிப்பு பற்றி கூடுதல் விளக்கம் கேட்டதற்கு விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக அரசு பதில் அனுப்பி உள்ளது. இதனால் அந்த தகவல் கிடைப்பதில் தாமதமானது. பின்னர் மீண்டும் அவர்களிடம் கேட்டதால் 18-ந் தேதி அனுப்பி வைத்து உள்ளனர். முழுமையான தகவல்கள் கிடைத்த உடன் மத்திய குழு கூடி நிவாரண நிதி வழங்குவது பற்றி விரைவில் முடிவு செய்யும். தாமதத்துக்கு தமிழக அரசு தான் காரணம்” என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில் கூறியதாவது:-
புயல் பாதிப்பில் இருந்து 5 மாவட்ட மக்கள் இன்னும் மீளவில்லை. அவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள்தான். எனவே அவர்கள் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வர மத்திய அரசு உடனடியாக போதுமான நிதியை அளிக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன்பு கூட அங்கு விவசாய பயிர்கள் அழிந்ததால் மனம் உடைந்து 2 பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே அங்கு இயல்பு நிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள்தான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல் மத்திய அரசு நடத்துகிறது. ஒடிசா, ஆந்திராவில் புயல் தாக்கிய போது மத்திய அரசு தனது நேரடி நிவாரண நிதியை ஒதுக்கி உதவியது. அந்த மாநிலங்களில் ஏற்பட்ட சேதத்தை விட, கஜா புயல் சேதம் பல மடங்கு அதிகம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் மீண்டும் வாதாடுகையில், “கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை ஒகி புயல் தாக்கியது. இதற்கான நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாங்கள் பல தடவை முறையிட்டும் இதுவரை மத்திய அரசு தனது நிவாரண நிதியை ஒதுக்கவில்லை. இப்போது கஜா புயலுக்கும் கூடுதல் விவரங்கள் என்ற பெயரில் இழுத்தடிக்கிறார்கள். அவர்கள் கேட்டபோதெல்லாம் அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. மேலும் மத்திய குழுவை சந்தித்து நேரிலும் உரிய விளக்கம் அளிப்பதற்காக தமிழக அதிகாரிகள் இன்று (அதாவது நேற்று) டெல்லி சென்று உள்ளனர்” என்றார்.
விவாதத்தின் முடிவில், “மத்திய குழுவுக்கு தமிழக அரசு அளித்துள்ள தகவல்கள் போதுமானவையா? நிவாரணம் வழங்குவது குறித்து மத்திய குழு எப்போது முடிவெடுக்கும்? என்பது பற்றி தெரிவியுங்கள்” என்று மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Leave a comment