ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்கு ரூ.6.86 கோடி செலவாகி இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதாவின் மருத்துவ மற்றும் சிகிச்சை தொடர்பான விவரங்கள் அடங்கிய 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விரிவான மருத்துவ அறிக்கையை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்கனவே தாக்கல் செய்தது.
இந்தநிலையில், 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக் கான கட்டண விவரங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.அதன்படி, ஜெயலலிதா சிகிச்சைக்கான செலவு விவரங்கள் அடங்கிய ரசீது நகலுடன் அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
மொத்த செலவு ரூ.6.86 கோடி
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக் கான மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 75 நாட்களுக்கான உணவு கட்டணம் ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 என்றும் அந்த ரசீதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரைக்கு ரூ.71 லட்சம், அறை வாடகை 24 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய், மருந்துகளுக்கான செலவு 39 லட்சத்து 34 ஆயிரத்து 56 ரூபாய், பொதுவான அறை வாடகை ரூ.1 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 910 என்றும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவுக்கு ரூ.92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாயும், பிசியோதெரபி சிகிச்சைக்காக 1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாய் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.6.41 கோடிக்கு காசோலை
2016-ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி ரூ.41 லட்சத்து 13 ஆயிரத்து 304-க்கான காசோலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ட போதிலும், இந்த தொகையை வழங்கியவர்கள் குறித்த விவரம் எதுவும் இல்லை. அதேவேளையில் ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு 2017-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ரூ.6 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கான மொத்த செலவில் ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 மட்டும் பாக்கி இருப்பதாகவும் அந்த ரசீதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இந்த தொகை வழங்கப்பட்டு விட்டதா, இல்லையா? என்பது குறித்தான விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.