பாகிஸ்தான் நாளிதழில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் எழுதிய கட்டுரை வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரை ஐ.நா., மற்றும் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகிறார். ஹபீஸ் சயீத் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் வெளியாகும் பிரபல உருது நாளிதழ் ஒன்றில் ஹபீஸ் சயீத் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கிழக்கு பாகிஸ்தானில்(வங்கதேசம்) இந்தியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஏன் பேசுவதில்லை என்பது குறித்து ஹபீஸ் எழுதிய கட்டுரை பாகிஸ்தானில் உள்ள உருது நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரையில், பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்க வேண்டும் எனவும் ஹபீஸ் சயீத் கூறியிருந்தார்.
இந்த கட்டுரையை வெளியிட்டதற்கு அந்த நாளிதழ் நிறுவனத்துக்கு பத்திரிகையாளர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதி என்று அறிவித்த ஒருவரின் கட்டுரையை எவ்வாறு வெளியிடலாம். ஹபீஸுடன் பத்திரிகை நிறுவன இயக்குநருக்கு நேரடி தொடர்பு இருப்பதால் இந்த கட்டுரை வெளியிடப்பட்டதா? அல்லது ஏதேனும் நிர்பந்தத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டதா என்று அந்த உருது நாளிதழ் நிறுவனத்துக்கு அந்நாட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.