சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது என சீன அதிபர் ஜின்பிங் ஆவேசமாக கூறினார்.
உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினர் இடையே வர்த்தகப்போர் மூண்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். அதில் இரு தரப்பு வர்த்தகப்போரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உடன்பாடு எட்டப்பட்டது.
ஜனவரி 1-ந் தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டன. இது 90 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் வர்த்தக பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், சீன சீர் திருத்த கொள்கையின் 40-வது ஆண்டு விழா பீஜிங் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடந்தது.
இதில் அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு 80 நிமிடங்கள் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் தனது நாட்டின் கடின உழைப்பு, விவேகம், துணிச்சல் ஆகியவற்றை புகழ்ந்தார்.
சீனாவின் முன்னாள் தலைவர் டெங் ஸியாவோபிங் 40 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்த சீர்திருத்தக்கொள்கைகளை அமல்படுத்திய பின்னர் நடத்தப்பட்டுள்ள சாதனைகளை பட்டியலிட்டார். அந்த வகையில், “கடந்த 40 ஆண்டுகளில் 74 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வந்த மக்களின் பட்டினி போன்ற பிரச்சினைகளுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது” என்றார்.
அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடவும் அவர் தவறவில்லை. இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ சீன மக்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது” என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “நாட்டின் பொருளாதார தாராளமயமாக்கம் தொடரும், தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும், அதே நேரத்தில் அரசு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும்” என கூறினார்.
மேலும், “சோசலிசத்தின் (பொது உடைமை கோட்பாடு) மிகப்பெரிய பதாகை, எப்போதுமே சீன நிலப்பகுதிக்கு மேல் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும்” எனவும் சூளுரைத்தார். பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் ஜின்பிங் பேச்சு சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது. குறிப்பாக மந்த நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தன்னிடம் என்ன திட்டம் உள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது