நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல. 19 ஆம் திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகாரம் ஒரு சிறியலவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே புதிய அரசியல் அமைப்பின் மூலமாக முழுமையாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி இன்று செய்த தவறை இனியொருமுறை செய்யாதிருக்க நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதே ஒரே வழிமுறை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
அரசியல்வாதிகளின் இனவாத செயற்பாடுகளை மக்கள் உதறித் தள்ளியுள்ளனர். எமது நாட்டினை மீண்டும் நாசமாக்க எந்த மக்களுக்கும் விருப்பம் இல்லை. இந்த நாட்டில் எவரும் இரண்டாம் தரப்பு மக்கள் அல்ல. அனைவரும் சமமானவர்கள். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் அது தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையும். பெரும்பான்மை மக்கள் உள்ளிட்ட எமது மக்கள் அனைவரும் இனவாதத்தை எதிர்த்துவிட்டனர்.
சகல மக்களும் சமமானவர்கள் என்பதை எமது மக்கள் நிருபித்துள்ளனர். நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் இந்த விடயத்தை கருத்தில்கொள்ள வேண்டும். இப்போது நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அதனை நழுவவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.